திருவருட்பா  63. எண்ணத் திரங்கல்

எளியேன்நின்  திருமுன்பே  என்உரைக்கேன்  பொல்லாத 
களியேன்  கொடுங்காமக்  கன்மனத்தேன்  நன்மையிலா 
வெளியேன்  வெறியேன்தன்  மெய்ப்பிணியை  ஒற்றியில்வாழ் 
அளியோய்நீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
1
முன்னேசெய்  வெவ்வினைதான்  மூண்டதுவோ  அல்லதுநான் 
இன்னே  பிழைதான்  இயற்றியதுண்  டோஅறியேன் 
பொன்னேர்  புரிசடைஎம்  புண்ணியனே  என்நோயை 
அன்னேநீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
2
இப்பா  ரிடைஉனையே  ஏத்துகின்ற  நாயேனை 
வெப்பார்  உளத்தினர்போல்  வெம்மைசெயும்  வெம்பிணியை 
எப்பா  லவர்க்கும்  இறைவனாம்  என்அருமை 
அப்பாநீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
3
ஓவா  மயல்செய்  உலகநடைக்  குள்துயரம் 
மேவா  உழல்கின்ற  வெண்மையேன்  மெய்ந்நோயைச் 
சேவார்  கொடிஎம்  சிவனே  சிவனேயோ 
ஆவாநீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
4
பொய்யாம்  மலஇருட்டுப்  பொத்தரிடை  வீழ்ந்துழலும் 
கையாம்  நெறியேன்  கலங்கவந்த  வெம்பிணியை 
மையார்  மிடற்றெம்  மருந்தே  மணியேஎன் 
ஐயாநீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
5
இம்மா  நிலத்தில்  இடருழத்தல்  போதாதே 
விம்மா  அழுங்கஎன்றன்  மெய்உடற்றும்  வெம்பிணியைச் 
செம்மான்  மழுக்கரங்கொள்  செல்வச்  சிவமேஎன் 
அம்மாநீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
6
புரைசேரும்  நெஞ்சப்  புலையனேன்  வன்காமத் 
தரைசேரும்  துன்பத்  தடங்கடலேன்  வெம்பிணியை 
விரைசேரும்  கொன்றை  விரிசடையாய்  விண்ணவர்தம் 
அரைசேநீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
7
இத்தா  ரணியில்  எளியோரைக்  கண்டுமி 
வித்தாரம்  பேசும்  வெறியேன்தன்  மெய்ப்பிணியைக் 
கொத்தார்  குழலிஒரு  கூறுடைய  கோவேஎன் 
அத்தாநீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
8
மறியேர்  விழியார்  மயக்கினிடை  மாழாந்த 
சிறியேன்  அடியேன்  தியங்கவந்த  வல்நோயைச் 
செறிவே  பெறுந்தொண்டர்  சிந்தை  தனில்ஓங்கும் 
அறிவேநீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
9
துன்பே  சுமையாச்  சுமக்கின்ற  நாயேனை 
வன்பேசெய்  துள்ள  மயக்கிநின்ற  வன்நோயை 
இன்பே  அருள்கின்ற  என்ஆ  ருயிரேஎன் 
அன்பேநீ  நீக்காயேல்  ஆர்நீக்க  வல்லாரே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com