திருவருட்பா  62. திரு அருட் கிரங்கல்

ஒப்பாரும்  இல்லாத  உத்தமனே  ஒற்றியில்என் 
அப்பாஉன்  பொன்னடிக்கே  அன்பிலேன்  ஆனாலும் 
தப்பா  தகமெலியச்  சஞ்சலத்தால்  ஏங்குகின்ற 
இப்பா  தகத்தேற்  கிரங்கினால்  ஆகாதோ. 
1
எஞ்சா  இடரால்  இரும்பிணியால்  ஏங்கிமனம் 
பஞ்சாக  நொந்து  பரதவிக்கும்  நாயேனைச் 
செஞ்சாலி  ஓங்கும்  திருவொற்றி  யப்பாநீ 
அஞ்சாதே  என்றுன்  அருள்கொடுத்தால்  ஆகாதோ. 
2
பற்றும்  செழுந்தமிழால்  பாடுகின்றோர்  செய்தபெருங் 
குற்றம்  குணமாகக்  கொள்ளும்  குணக்கடலே 
மற்றங்கும்  எண்தோள்  மலையே  மரகதமே 
பெற்றிங்  கடியேன்  பிணிகெடுத்தால்  ஆகாதோ. 
3
எந்தையே  என்பவர்தம்  இன்னமுதே  என்உரிமைத் 
தந்தையே  தாயே  தமரேஎன்  சற்குருவே 
சிந்தையே  ஓங்கும்  திருவொற்றி  ஐயாஎன் 
நிந்தையே  நீங்க  நிழல்அளித்தால்  ஆகாதோ. 
4
உள்ளும்  திருத்தொண்டர்  உள்ளத்  தெழுங்களிப்பே 
கொள்ளும்  சிவானந்தக்  கூத்தாஉன்  சேவடியை 
நள்ளும்  புகழுடைய  நல்லோர்கள்  எல்லாரும் 
எள்ளும்  புலையேன்  இழிவொழித்தால்  ஆகாதோ. 
5
கோதைஓர்  கூறுடைய  குன்றமே  மன்றமர்ந்த 
தாதையே  ஒற்றித்  தலத்தமர்ந்த  சங்கரனே 
தீதையே  நாள்தோறும்  செய்தலைந்து  வாடுமிந்தப் 
பேதையேன்  செய்த  பிழைபொறுத்தால்  ஆகாதோ. 
6
முத்திக்கு  வித்தே  முழுமணியே  முத்தர்உளம் 
தித்திக்கும்  தேனே  சிவமே  செழுஞ்சுடரே 
சத்திக்கும்  நாதத்  தலங்கடந்த  தத்துவனே 
எத்திக்கும்  இல்லேன்  இளைப்பொழித்தால்  ஆகாதோ. 
7
வஞ்சமிலார்  உள்ளம்  மருவுகின்ற  வான்சுடரே 
கஞ்சமுளான்  போற்றும்  கருணைப்  பெருங்கடலே 
நஞ்சமுதாக்  கொண்டருளும்  நல்லவனே  நின்அலதோர் 
தஞ்சமிலேன்  துன்பச்  சழக்கொழித்தால்  ஆகாதோ. 
8
சேய்பிழையைத்  தாய்அறிந்தும்  சீறாள்  பொறுப்பாள்இந் 
நாய்பிழையை  நீபொறுக்க  ஞாயமும்உண்  டையாவே 
தேய்மதிபோல்  நெஞ்சம்  தியக்கம்உறச்  சஞ்சலத்தால் 
வாய்அலறி  வாடும்எனை  வாஎன்றால்  ஆகாதோ. 
9
கண்ணுள்  மணிபோல்  கருதுகின்ற  நல்லோரை 
எண்ணும்  கணமும்விடுத்  தேகாத  இன்னமுதே 
உண்ணும்  உணவுக்கும்  உடைக்கும்முயன்  றோடுகின்ற 
மண்ணுலகத்  தென்றன்  மயக்கறுத்தால்  ஆகாதோ. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com