திருவருட்பா  61. திருக்காட்சிக் கிரங்கல்

மண்ணேயும்  வாழ்க்கையிடை  மாழாந்து  வன்பிணியால் 
புண்ணேயும்  நெஞ்சம்  புழுங்குகின்ற  பொய்யவனேன் 
பண்ணேயும்  இன்பப்  பரஞ்சுடரே  என்இரண்டு 
கண்ணேஉன்  பொன்முகத்தைக்  காணக்  கிடைத்திலனே. 
1
மருள்ஆர்ந்த  வல்வினையால்  வன்பிணியால்  வன்துயரால் 
இருள்ஆர்ந்த  நெஞ்சால்  இடியுண்ட  ஏழையனேன் 
தெருள்ஆர்ந்த  மெய்ஞ்ஞானச்  செல்வச்  சிவமேநின் 
அருள்ஆர்ந்த  முக்கண்  அழகுதனைக்  கண்டிலனே. 
2
வல்லார்  முலையார்  மயல்உழந்த  வஞ்சகனேன் 
பொல்லார்  புரம்எரித்த  புண்ணியனே  பொய்மறுத்த 
நல்லார்  தொழுந்தில்லை  நாயகனே  நன்றளித்த 
அல்லார்  களத்தின்  அழகுதனைக்  கண்டிலனே. 
3
நோயால்  மெலிந்துனருள்  நோக்குகின்ற  நொய்யவனேன் 
தாயா  னவனேஎன்  தந்தையே  அன்பர்தமைச் 
சேயாய்  வளர்க்கும்  சிவனே  சிவனேஎம் 
தூயாநின்  பொற்றோளின்  சுந்தரத்தைக்  கண்டிலனே. 
4
வன்னேர்  முலையார்  மயல்உழந்த  வன்மனத்தேன் 
அன்னேஎன்  அப்பாஎன்  ஐயாஎன்  ஆரமுதே 
மன்னே  மணியே  மலையாள்  மகிழ்உனது 
பொன்னேர்  இதழிப்  புயங்காணப்  பெற்றிலனே. 
5
நண்ணும்  வினையால்  நலிகின்ற  நாயடியேன் 
எண்ணும்  சுகாதீத  இன்பமே  அன்புடையோர் 
கண்ணும்  கருத்தும்  களிக்கவரும்  கற்பகமே 
பெண்ஒருபால்  வாழும்உருப்  பெற்றிதனைக்  கண்டிலனே. 
6
தெவ்வண்ண  மாயையிடைச்  செம்மாந்த  சிற்றடியேன் 
இவ்வண்ணம்  என்றறிதற்  கெட்டாத  வான்பொருளே 
அவ்வண்ண  மான  அரசே  அமுதேநின் 
செவ்வண்ண  மேனித்  திறங்காணப்  பெற்றிலனே. 
7
அல்வைத்த  நெஞ்சால்  அழுங்குகின்ற  நாயடியேன் 
சொல்வைத்த  உண்மைத்  துணையே  இணைத்தோள்மேல் 
வில்வத்  தொடைஅணிந்த  வித்தகனே  நின்னுடைய 
செல்வத்  திருவடியின்  சீர்காணப்  பெற்றிலனே. 
8
பொத்தேர்  மயலால்  புழுங்குகின்ற  பொய்யடியேன் 
கொத்தேர்  செழுங்கொன்றைக்  குன்றமே  கோவாத 
முத்தே  எவர்க்கும்  முழுமுதலே  முத்திக்கு 
வித்தேநின்  பொன்னடிக்கீழ்  மேவிநிற்க  கண்டிலனே. 
9
நீதியிலார்  வாயிலிடை  நின்றலைந்த  நெஞ்சகனேன் 
சோதிஎலாம்  சூழ்ந்தபரஞ்  சோதியே  செஞ்சடைமேல் 
பாதிநிலா  ஓங்கும்  பரமேநீ  ஒற்றிநகர் 
வீதிஉலா  வந்தஎழில்  மெய்குளிரக்  கண்டிலனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com