திருவருட்பா  35. நெஞ்சறை கூவல்

கண்கள்  மூன்றினார்  கறைமணி  மிடற்றார் 
கங்கை  நாயகர்  மங்கைபங்  குடையார் 
பண்கள்  நீடிய  பாடலார்  மன்றில் 
பாத  நீடிய  பங்கயப்  பதத்தார் 
ஒண்கண்  மாதரார்  நடம்பயில்  ஒற்றி 
யூர்அ  மர்ந்துவாழ்  வுற்றவர்க்  கேநம் 
மண்கொண்  மாலைபோம்  வண்ணம்நல்  தமிழ்ப்பூ 
மாலை  சூட்டுதும்  வருதிஎன்  மனனே. 
1
கரிய  மாலன்று  கரியமா  வாகிக் 
கலங்க  நின்றபொன்  கழல்புனை  பதத்தார் 
பெரிய  அண்டங்கள்  யாவையும்  படைத்தும் 
பித்தர்  என்னும்அப்  பேர்தனை  அகலார் 
உரிய  சீர்கொளும்  ஒற்றியூர்  அமர்ந்தார் 
உம்பர்  நாயகர்  தம்புயம்  புனைய 
வரிய  கன்றநன்  மலர்கொடு  தெரிந்து 
மாலை  சூட்டுதும்  வருதிஎன்  மனனே. 
2
திருவின்  நாயகன்  கைப்படை  பெறுவான் 
திருக்கண்  சாத்திய  திருமலர்ப்  பதத்தார் 
கருவின்  நின்றஎம்  போல்பவர்  தம்மைக் 
காத்த  ளிப்பதே  கடன்எனக்  கொண்டார் 
உருவின்  நின்றவர்  அருஎன  நின்றோர் 
ஒற்றி  யூரிடை  உற்றனர்  அவர்க்கு 
மருவின்  நின்றநன்  மணங்கொளும்  மலர்ப்பூ 
மாலை  சூட்டுதும்  வருதிஎன்  மனனே. 
3
கரும்பைந்  நாகணைக்  கடவுள்நான்  முகன்வான் 
கடவுள்  ஆதியர்  கலகங்கள்  தவிர்ப்பான் 
துரும்பை  நாட்டிஓர்  விஞ்சையன்  போலத் 
தோன்றி  நின்றவர்  துரிசறுத்  திட்டோன் 
தரும்பைம்  பூம்பொழில்  ஒற்றியூர்  இடத்துத் 
தலங்கொண்  டார்அவர்  தமக்குநாம்  மகிழ்ந்து 
வரும்பைஞ்  சீர்த்தமிழ்  மாலையோ  டணிபூ 
மாலை  சூட்டுதும்  வருதிஎன்  மனனே. 
4
வதன  நான்குடை  மலரவன்  சிரத்தை 
வாங்கி  ஓர்கையில்  வைத்தநம்  பெருமான் 
நிதன  நெஞ்சகர்க்  கருள்தரும்  கருணா 
நிதிய  மாகிய  நின்மலப்  பெருமான் 
சுதன  மங்கையர்  நடம்செயும்  ஒற்றித் 
தூய  னால்அவர்  துணைத்திருத்  தோட்கு 
மதன  இன்தமிழ்  மாலையோ  டணுபூ 
மாலை  சூட்டுதும்  வருதிஎன்  மனனே. 
5
கஞ்சன்  அங்கொரு  விஞ்சனம்  ஆகிக் 
காலில்  போந்துமுன்  காணரு  முடியார் 
அஞ்ச  னம்கொளும்  நெடுங்கணாள்  எங்கள் 
அம்மை  காணநின்  றாடிய  பதத்தார் 
செஞ்சொன்  மாதவர்  புகழ்திரு  வொற்றித் 
தேவர்  காண்அவர்  திருமுடிக்  காட்ட 
மஞ்ச  னங்கொடு  வருதும்என்  மொழியை 
மறாது  நீஉடன்  வருதிஎன்  மனனே. 
6
சூழு  மாலயன்  பெண்ணுரு  எடுத்துத் 
தொழும்பு  செய்திடத்  தோன்றிநின்  றவனைப் 
போழும்  வண்ணமே  வடுகனுக்  கருளும் 
பூத  நாதர்நற்  பூரணா  னந்தர் 
தாழும்  தன்மையோர்  உயர்வுறச்  செய்யும் 
தகையர்  ஒற்றியூர்த்  தலத்தினர்  அவர்தாம் 
வாழும்  கோயிற்குத்  திருவல  கிடுவோம் 
மகிழ்வு  கொண்டுடன்  வருதிஎன்  மனனே. 
7
விதியும்  மாலுமுன்  வேறுரு  எடுத்து 
மேலும்  கீழுமாய்  விரும்புற  நின்றோர் 
நதியும்  கொன்றையும்  நாகமும்  பிறையும் 
நண்ணி  ஓங்கிய  புண்ணியச்  சடையார் 
பதியு  நாமங்கள்  அனந்தமுற்  றுடையார் 
பணைகொள்  ஒற்றியூர்ப்  பரமர்கா  ணவர்தாம் 
வதியும்  கோயிற்குத்  திருவிளக்  கிடுவோம் 
வாழ்க  நீஉடன்  வருதிஎன்  மனனே. 
8
குளங்கொள்  கண்ணினார்  குற்றமே  செயினும் 
குணமென்  றேஅதைக்  கொண்டருள்  புரிவோர் 
உளங்கொள்  அன்பர்தம்  உள்ளகத்  திருப்போர் 
ஒற்றி  யூரிடம்  பற்றிய  புனிதர் 
களங்கொள்  கண்டரெண்  தோளர்கங்  காளர் 
கல்லை  வில்எனக்  கண்டவர்  அவர்தம் 
வளங்கொள்  கோயிற்குத்  திருமெழுக்  கிடுவோம் 
வாழ்க  நீஉடன்  வருதிஎன்  மனனே. 
9
பணிகொள்  மார்பினர்  பாகன  மொழியாள் 
பாகர்  காலனைப்  பாற்றிய  பதத்தார் 
திணிகொள்  வன்மத  மலைஉரி  போர்த்தோர் 
தேவர்  நாயகர்  திங்களம்  சடையார் 
அணிகொள்  ஒற்றியூர்  அமர்ந்திடும்  தியாகர் 
அழகர்  அங்கவர்  அமைந்துவீற்றிருக்கும் 
மணிகொள்  கோயிற்குத்  திருப்பணி  செய்தும் 
வாழ்க  நீஉடன்  வருதிஎன்  மனனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com