
அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண்ணீறே
பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
திணிகொள் சங்கர சிவசிவ என்று
சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ
பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
வைத போதினும் வாழ்த்தென நினைத்து
மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.
இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
புலையி னார்கள்பால் போதியோ வீணில்
போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
முன்னு றாவகை என்னுறும் உன்னால்
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.
தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
தேனை மெய்அருள் திருவினை அடியர்
ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
மானை அம்பல வாணனை நினையாய்
வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ
ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான்
முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை
முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண்
என்னை நீஎனக் குறுதுணை அந்தோ
என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில்
மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால்
மற்று நாம்பிற வாவகை வருமே.
பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே
இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
நன்று செய்வதற் குடன்படு வாயேல்
நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம்
இன்று செய்திநீ நாளைஎன் பாயேல்
இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே
ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர்
உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
அன்று முன்னரே கடந்தனர் அன்றி
அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.
அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
முன்றில் காத்தனை அவ்வள வேனும்
முயன்று காத்திலை முன்னவன் கோயில்
துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
காய மாயமாம் கான்செறிந் துலவும்
கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
காய சோதிகண் டமருதல் அணியே.



