திருவருட்பா  33. எதிர்கொள் பத்து

ஆனந்தக்  கூத்தனை  அம்பலத்  தானை 
அற்புதத்  தேனைஎம்  ஆதிப்பி  ரானைத் 
தேனந்தக்  கொன்றைஅம்  செஞ்சடை  யானைச் 
செங்கண்வி  டையனை  எங்கண்ம  ணியை 
மோனந்தத்  தார்பெறும்  தானந்தத்  தானை 
முத்தனை  முத்தியின்  வித்தனை  முத்தை 
ஈனந்தக்  காதெனை  ஏன்றுகொண்  டானை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
1
அடுத்தவர்க்  கெல்லாம்அ  ருள்புரி  வானை 
அம்பலக்  கூத்தனை  எம்பெரு  மானைத் 
தடுத்தெமை  ஆண்டுகொண்  டன்பளித்  தானைச் 
சங்கரன்  தன்னைஎன்  தந்தையைத்  தாயைக் 
கடுத்ததும்  பும்மணி  கண்டத்தி  னானைக் 
கண்ணுத  லானைஎம்  கண்ணக  லானை 
எடுத்தெனைத்  துன்பம்விட்  டேறவைத்  தானை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
2
மாலயன்  தேடியும்  காணாம  லையை 
வந்தனை  செய்பவர்  கண்டம  ருந்தை 
ஆலம்அ  முதின்அ  ருந்தல்செய்  தானை 
ஆதியை  ஆதியோ  டந்தமி  லானைக் 
காலன்வ  ருந்திவி  ழவுதைத்  தானைக் 
கருணைக்க  டலைஎன்  கண்ணனை  யானை 
ஏலம  ணிகுழ  லாள்இடத்  தானை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
3
சுந்தரர்க்  காகமுன்  தூதுசென்  றானைத் 
தூயனை  யாவரும்  சொல்லரி  யானைப் 
பந்தம்அ  றுக்கும்ப  ராபரன்  தன்னைப் 
பத்தர்உ  ளங்கொள்ப  ரஞ்சுட  ரானை 
மந்தர  வெற்பின்ம  கிழ்ந்தமர்ந்  தானை 
வானவர்  எல்லாம்வ  ணங்கநின்  றானை 
எந்தமை  ஆண்டுநல்  இன்பளித்  தானை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
4
அன்பர்கள்  வேண்டும்அ  வைஅளிப்  பானை 
அம்பலத்  தேநடம்  ஆடுகின்  றானை 
வன்பர்கள்  நெஞ்சில்ம  ருவல்இல்  லானை 
வானவர்  கோனைஎம்  வாழ்முத  லானைத் 
துன்பம்  தவிர்த்துச்சு  கங்கொடுப்  பானைச் 
சோதியைச்  சோதியுள்  சோதியை  நாளும் 
என்பணி  கொண்டெனை  ஏன்றுகொண்  டானை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
5
கண்ணுத  லானைஎன்  கண்ணமர்ந்  தானைக் 
கருணாநி  தியைக்க  றைமிடற்  றானை 
ஒண்ணுத  லாள்உமை  வாழ்இடத்  தானை 
ஒருவனை  ஒப்பிலா  உத்தமன்  தன்னை 
நண்ணுதல்  யார்க்கும்அ  ருமையி  னானை 
நாதனை  எல்லார்க்கும்  நல்லவன்  தன்னை 
எண்ணுதல்  செய்தெனக்  கின்பளித்  தானை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
6
வெள்விடை  மேல்வரும்  வீறுடை  யானை 
வேதமு  டிவினில்  வீற்றிருந்  தானைக் 
கள்விரை  யார்மலர்க்  கொன்றையி  னானைக் 
கற்பகந்  தன்னைமுக்  கண்கொள்க  ரும்பை 
உள்வினை  நீக்கிஎன்  உள்ளமர்ந்  தானை 
உலகுடை  யானைஎன்  உற்றது  ணையை 
எள்வினை  ஒன்றும்இ  லாதவன்  தன்னை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
7
பெண்ணமர்  பாகனைப்  பேரரு  ளோனைப் 
பெரியவர்க்  கெல்லாம்பெ  ரியவன்  தன்னைக் 
கண்ணமர்  நெற்றிக்  கடவுள்பி  ரானைக் 
கண்ணனை  ஆண்டமுக்  கண்ணனை  எங்கள் 
பண்ணமர்  பாடல்ப  ரிசளித்  தானைப் 
பார்முதல்  அண்டம்ப  டைத்தளிப்  பானை 
எண்அம  ராதஎ  ழிலுடை  யானை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
8
வளங்கொளும்  தில்லைப்பொன்  மன்றுடை  யானை 
வானவர்  சென்னியின்  மாணிக்கம்  தன்னைக் 
களங்கம்இ  லாதக  ருத்துடை  யானைக் 
கற்பனை  முற்றும்க  டந்துநின்  றானை 
உளங்கொளும்  என்தன்உ  யிர்த்துணை  யானை 
உண்மையை  எல்லாம்உ  டையவன்  தன்னை 
இளம்பிறை  சூடிய  செஞ்சடை  யானை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
9
குற்றமெல்  லாம்குண  மாகக்கொள்  வானைக் 
கூத்துடை  யானைப்பெண்  கூறுடை  யானை 
மற்றவர்  யார்க்கும்அ  ரியவன்  தன்னை 
வந்திப்ப  வர்க்குமி  கஎளி  யானைப் 
பெற்றம  தேறும்பெ  ரியபி  ரானைப் 
பிறைமுடி  யோனைப்பெம்  மானைஎம்  மானை 
எற்றிஎன்  துன்பம்எ  லாம்ஒழித்  தானை 
இன்றைஇ  ரவில்எ  திர்ந்துகொள்  வேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com