திருவருட்பா  36. நெஞ்சைத் தேற்றல்

சென்று  வஞ்சர்தம்  புறங்கடை  நின்று 
திகைக்க  எண்ணும்என்  திறன்இலா  நெஞ்சே 
ஒன்றும்  அஞ்சலை  என்னுடன்  கூடி 
ஒற்றி  யூர்க்கின்று  வருதியேல்  அங்கு 
மன்றுள்  மேவிய  வள்ளலார்  மகிழ்ந்து 
வாழ்கின்  றார்அவர்  மலரடி  வணங்கி 
நன்று  வேண்டிய  யாவையும்  வாங்கி 
நல்கு  வேன்எனை  நம்புதி  மிகவே. 
1
தீது  வேண்டிய  சிறியர்தம்  மனையில் 
சென்று  நின்றுநீ  திகைத்திடல்  நெஞ்சே 
யாது  வேண்டுதி  வருதிஎன்  னுடனே 
யாணர்  மேவிய  ஒற்றியூர்  அகத்து 
மாது  வேண்டிய  நடனநா  யகனார் 
வள்ள  லார்அங்கு  வாழ்கின்றார்  கண்டாய் 
ஈது  வேண்டிய  தென்னுமுன்  அளிப்பார் 
ஏற்று  வாங்கிநான்  ஈகுவன்  உனக்கே. 
2
இரக்கின்  றோர்களுக்  கில்லைஎன்  னார்பால் 
இரத்தல்  ஈதலாம்  எனல்உணர்ந்  திலையோ 
கரக்கின்  றோர்களைக்  கனவினும்  நினையேல் 
கருதி  வந்தவர்  கடியவர்  எனினும் 
புரக்கின்  றோர்மலர்ப்  புரிசடை  உடையார் 
பூத  நாயகர்  பொன்மலைச்  சிலையார் 
உரக்குன்  றோர்திரு  வொற்றியூர்க்  கேகி 
உன்னி  ஏற்குதும்  உறுதிஎன்  நெஞ்சே. 
3
கல்லின்  நெஞ்சர்பால்  கலங்கல்என்  நெஞ்சே 
கருதி  வேண்டிய  தியாதது  கேண்மோ 
சொல்லின்  ஓங்கிய  சுந்தரப்  பெருமான் 
சோலைசூழ்  ஒற்றித்  தொன்னகர்ப்  பெருமான் 
அல்லின்  ஓங்கிய  கண்டத்தெம்  பெருமான் 
அயனும்  மாலும்நின்  றறிவரும்  பெருமான் 
வல்லை  ஈகுவான்  ஈகுவ  தெல்லாம் 
வாங்கி  ஈகுவேன்  வருதிஎன்  னுடனே. 
4
இலவு  காக்கின்ற  கிள்ளைபோல்  உழன்றாய் 
என்னை  நின்மதி  ஏழைநீ  நெஞ்சே 
பலவு  வாழைமாக்  கனிகனிந்  திழியும் 
பணைகொள்  ஒற்றியூர்க்  கென்னுடன்  வருதி 
நிலவு  வெண்மதிச்  சடையுடை  அழகர் 
நிறைய  மேனியில்  நிகழ்ந்தநீற்  றழகர் 
குலவு  கின்றனர்  வேண்டிய  எல்லாம் 
கொடுப்பர்  வாங்கிநான்  கொடுப்பன்உன்  தனக்கே. 
5
மன்னு  ருத்திரர்  வாழ்வைவேண்  டினையோ 
மால  வன்பெறும்  வாழ்வுவேண்  டினையோ 
அன்ன  ஊர்திபோல்  ஆகவேண்  டினையோ 
அமையும்  இந்திரன்  ஆகவேண்  டினையோ 
என்ன  வேண்டினும்  தடையிலை  நெஞ்சே 
இன்று  வாங்கிநான்  ஈகுவன்  உனக்கே 
வன்னி  அஞ்சடை  எம்பிரான்  ஒற்றி 
வளங்கொள்  ஊரிடை  வருதிஎன்  னுடனே. 
6
மறப்பி  லாச்சிவ  யோகம்வேண்  டுகினும் 
வழுத்த  ரும்பெரு  வாழ்வுவேண்  டுகினும் 
இறப்பி  லாதின்னும்  இருக்கவேண்  டுகினும் 
யாது  வேண்டினும்  ஈகுவன்  உனக்கே 
பிறப்பி  லான்எங்கள்  பரசிவ  பெருமான் 
பித்தன்  என்றுநீ  பெயர்ந்திடல்  நெஞ்சே 
வறப்பி  லான்அருட்  கடல்அவன்  அமர்ந்து 
வாழும்  ஒற்றியின்  வருதிஎன்  னுடனே. 
7
காலம்  செல்கின்ற  தறிந்திலை  போலும் 
காலன்  வந்திடில்  காரியம்  இலைகாண் 
நீலம்  செல்கின்ற  மிடற்றினார்  கரத்தில் 
நிமிர்ந்த  வெண்நெருப்  பேந்திய  நிமலர் 
ஏலம்  செல்கின்ற  குழலிஓர்  புடையார் 
இருக்கும்  ஒற்றியூர்க்  கென்னுடன்  வருதி 
ஞாலம்  செல்கின்ற  துயர்கெட  வரங்கள் 
நல்கு  வார்அவை  நல்குவன்  உனக்கே. 
8
சென்று  நீபுகும்  வழியெலாம்  உன்னைத் 
தேட  என்வசம்  அல்லஎன்  நெஞ்சே 
இன்ற  ரைக்கணம்  எங்கும்நேர்ந்  தோடா 
தியல்கொள்  ஒற்றியூர்க்  கென்னுடன்  வருதி 
அன்று  வானவர்  உயிர்பெற  நஞ்சம் 
அருந்தி  நின்றஎம்  அண்ணலார்  இடத்தே 
நின்று  வேண்டிய  யாவையும்  உனக்கு 
நிகழ  வாங்கிநான்  ஈகுவன்  அன்றே. 
9
கெடுக்கும்  வண்ணமே  பலர்உனக்  குறுதி 
கிளத்து  வார்அவர்  கெடுமொழி  கேளேல் 
அடுக்கும்  வண்ணமே  சொல்கின்றேன்  எனைநீ 
அம்மை  இம்மையும்  அகன்றிடா  மையினால் 
தடுக்கும்  வண்ணமே  செய்திடேல்  ஒற்றித் 
தலத்தி  னுக்கின்றென்  றன்னுடன்  வருதி 
மடுக்கும்  வண்ணமே  வேண்டிய  எல்லாம் 
வாங்கி  ஈகுவன்  வாழ்திஎன்  நெஞ்சே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com