திருவருட்பா  26. திருவடிச் சரண்புகல்

ஓடல்  எங்கணும்  நமக்கென்ன  குறைகாண் 
உற்ற  நற்றுணை  ஒன்றும்இல்  லார்போல் 
வாடல்  நெஞ்சமே  வருதிஎன்  னுடனே 
மகிழ்ந்து  நாம்இரு  வரும்சென்று  மகிழ்வாய்க் 
கூடல்  நேர்திரு  ஒற்றியூர்  அகத்துக் 
கோயில்  மேவிநம்  குடிமுழு  தாளத் 
தாள்த  லந்தரும்  நமதருள்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
1
ஏங்கி  நோகின்ற  தெற்றினுக்  கோநீ 
எண்ணி  வேண்டிய  தியாவையும்  உனக்கு 
வாங்கி  ஈகுவன்  ஒன்றுக்கும்  அஞ்சேல் 
மகிழ்ந்து  நெஞ்சமே  வருதிஎன்  னுடனே 
ஓங்கி  வாழ்ஒற்றி  யூர்இடை  அரவும் 
ஒளிகொள்  திங்களும்  கங்கையும்  சடைமேல் 
தாங்கி  வாழும்நம்  தாணுவாம்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
2
கயவர்  இல்லிடைக்  கலங்கலை  நெஞ்சே 
காம  ஐம்புலக்  கள்வரை  வீட்டி 
வயம்அ  ளிக்குவன்  காண்டிஎன்  மொழியை 
மறுத்தி  டேல்இன்று  வருதிஎன்  னுடனே 
உயவ  ளிக்குநல்  ஒற்றியூர்  அமர்ந்தங் 
குற்று  வாழ்த்திநின்  றுன்னுகின்  றவர்க்குத் 
தயவ  ளிக்குநம்  தனிமுதல்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
3
சண்ட  வெம்பவப்  பிணியினால்  தந்தை 
தாயி  லார்எனத்  தயங்குகின்  றாயே 
மண்ட  லத்துழல்  நெஞ்சமே  சுகமா 
வாழ  வேண்டிடில்  வருதிஎன்  னுடனே 
ஒண்த  லத்திரு  ஒற்றியூர்  இடத்தும் 
உன்னு  கின்றவர்  உள்ளகம்  எனும்ஓர் 
தண்த  லத்தினும்  சார்ந்தநம்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
4
விடங்கொள்  கண்ணினார்  அடிவிழுந்  தையோ 
வெட்கி  னாய்இந்த  விதிஉனக்  கேனோ 
மடங்கொள்  நெஞ்சமே  நினக்கின்று  நல்ல 
வாழ்வு  வந்தது  வருதிஎன்  னுடனே 
இடங்கொள்  பாரிடை  நமக்கினி  ஒப்பா 
ரியார்கண்  டாய்ஒன்றும்  எண்ணலை  கமலத் 
தடங்கொள்  ஒற்றியூர்  அமர்ந்தநம்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
5
பொருந்தி  ஈனருள்  புகுந்துவீண்  காலம் 
போக்கி  நின்றனை  போனது  போக 
வருந்தி  இன்னும்இங்  குழன்றிடேல்  நெஞ்சே 
வாழ்க  வாழ்கநீ  வருதிஎன்  னுடனே 
திருந்தி  நின்றநம்  மூவர்தம்  பதிகச் 
செய்ய  தீந்தமிழ்த்  தேறல்உண்  டருளைத் 
தருந்தென்  ஒற்றியூர்  வாழுநம்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
6
நாட்டம்  உற்றெனை  எழுமையும்  பிரியா 
நல்ல  நெஞ்சமே  நங்கையர்  மயலால் 
வாட்டம்  உற்றிவண்  மயங்கினை  ஐயோ 
வாழ  வேண்டிடில்  வருதிஎன்  னுடனே 
கோட்டம்  அற்றிரு  மலர்க்கரம்  கூப்பிக் 
கும்பி  டும்பெரும்  குணத்தவர்  தமக்குத் 
தாள்த  லந்தரும்  ஒற்றியூர்ச்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
7
உடுக்க  வேண்டிமுன்  உடைஇழந்  தார்போல் 
உள்ள  வாகும்என்  றுன்னிடா  தின்பம் 
மடுக்க  வேண்டிமுன்  வாழ்விழந்  தாயே 
வாழ  வேண்டிடில்  வருதிஎன்  னுடனே 
அடுக்க  வேண்டிநின்  றழுதழு  தேத்தி 
அருந்த  வத்தினர்  அழிவுறாப்  பவத்தைத் 
தடுக்க  வேண்டிநல்  ஒற்றியூர்ச்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
8
மோக  மாதியால்  வெல்லும்ஐம்  புலனாம் 
மூட  வேடரை  முதலற  எறிந்து 
வாகை  ஈகுவன்  வருதிஎன்  னுடனே 
வஞ்ச  வாழ்க்கையின்  மயங்கும்என்  நெஞ்சே 
போக  நீக்கிநல்  புண்ணியம்  புரிந்து 
போற்றி  நாள்தொறும்  புகழ்ந்திடும்  அவர்க்குச் 
சாகை  நீத்தருள்  ஒற்றியூர்ச்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
9
பசிஎ  டுக்குமுன்  அமுதுசே  கரிப்பார் 
பாரி  னோர்கள்அப்  பண்பறிந்  திலையோ 
வசிஎ  டுக்குமுன்  பிறப்பதை  மாற்றா 
மதியில்  நெஞ்சமே  வருதிஎன்  னுடனே 
நிசிஎ  டுக்கும்நல்  சங்கவை  ஈன்ற 
நித்தி  லக்குவை  நெறிப்பட  ஓங்கிச் 
சசிஎ  டுக்குநல்  ஒற்றியூர்ச்  செல்வத் 
தந்தை  யார்அடிச்  சரண்புக  லாமே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com