திருவருட்பா  24. தியாக வண்ணப் பதிகம்

காரார்  குழலாள்  உமையோ  டயில்வேல்  காளையொ  டுந்தான்  அமர்கின்ற 
ஏரார்  கோலம்  கண்டு  களிப்பான்  எண்ணும்  எமக்கொன்  றருளானேல் 
நீரார்  சடைமேல்  பிறையொன்  றுடையான்  நிதிக்கோன்  தோழன்  எனநின்றான் 
பேரார்  ஒற்றி  யூரான்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
1
தண்ணார்  நீபத்  தாரா  னொடும்எம்  தாயோ  டும்தான்  அமர்கின்ற 
கண்ணார்  கோலம்  கண்டு  களிப்பான்  கருதும்  எமக்கொன்  றருளானேல் 
பண்ணார்  இன்சொல்  பதிகம்  கொண்டு  படிக்கா  சளித்த  பரமன்ஓர் 
பெண்ணார்  பாகன்  ஒற்றித்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
2
பத்தர்க்  கருளும்  பாவையொ  டும்வேல்  பாலனொ  டும்தான்  அமர்கின்ற 
நித்தக்  கோலம்  கண்டு  களிப்பான்  நினைக்கும்  எமக்கொன்  றருளானேல் 
சித்தப்  பெருமான்  தில்லைப்  பெருமான்  தெய்வப்  பெருமான்  சிவபெருமான் 
பித்தப்  பெருமான்  ஒற்றித்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
3
மன்னும்  கதிர்வேல்  மகனா  ரோடும்  மலையா  ளொடும்தான்  வதிகின்ற 
துன்னும்  கோலம்  கண்டு  களிப்பான்  துதிக்கும்  எமக்கொன்  றருளானேல் 
மின்னும்  சூலப்  படையான்  விடையான்  வெள்ளிமலையொன்  றதுஉடையான் 
பின்னும்  சடையான்  ஒற்றித்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
4
அணிவேல்  படைகொள்  மகனா  ரொடும்எம்  அம்மை  யொடுந்தான்  அமர்கின்ற 
தணியாக்  கோலம்கண்டு  களிக்கத்  தகையா  தெமக்கொன்  றருளானேல் 
மணிசேர்  கண்டன்  எண்தோள்  உடையான்  வடபால்  கனக  மலைவில்லான் 
பிணிபோக்  கிடுவான்  ஒற்றித்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
5
சூத  மெறிவேல்  தோன்ற  லொடும்தன்  துணைவி  யொடும்தான்  அமர்கின்ற 
காதல்  கோலம்  கண்டு  களிப்பான்  கருதும்  எமக்கொன்  றருளானேல் 
ஈதல்  வல்லான்  எல்லாம்  உடையான்  இமையோர்  அயன்மாற்  கிறையானான் 
பேதம்  இல்லான்  ஒற்றித்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
6
வெற்றிப்  படைவேல்  பிள்ளை  யோடும்  வெற்பா  ளொடும்தான்  அமர்கின்ற 
மற்றிக்  கோலம்  கண்டு  களிப்பான்  வருந்தும்  எமக்கொன்  றருளானேல் 
கற்றைச்  சடையான்  கண்மூன்  றுடையான்  கரியோன்  அயனும்  காணாதான் 
பெற்றத்  திவர்வான்  ஒற்றித்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
7
வரமன்  றலினார்  குழலா  ளொடும்வேல்  மகனா  ரொடும்தான்  அமர்கின்ற 
திரமன்  றவுநின்  றெழில்கண்  டிடுவான்  சிறக்க  எமக்கொன்  றருளானேல் 
பரமன்  தனிமால்  விடைஒன்  றுடையான்  பணியே  பணியாப்  பரிவுற்றான் 
பிரமன்  தலையான்  ஒற்றித்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
8
அறங்கொள்  உமையோ  டயிலேந்  தியஎம்  ஐய  னொடுந்தான்  அமர்கின்ற 
திறங்கொள்  கோலம்  கண்டுக  ளிப்பான்  சிறக்க  எமக்கொன்  றருளானேல் 
மறங்கொள்  எயில்மூன்  றெரித்தான்  கனக  மலையான்  அடியார்  மயல்தீர்ப்பான் 
பிறங்கும்  சடையான்ஒற்றித்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
9
தேசார்  அயில்வேல்  மகனா  ரொடும்தன்  தேவி  யொடும்தான்  அமர்கோலம் 
ஈசா  எனநின்  றேத்திக்  காண  எண்ணும்  எமக்கொன்  றருளானேல் 
காசார்  அரவக்  கச்சேர்  இடையான்  கண்ணார்  நுதலான்  கனிவுற்றுப் 
பேசார்க்கருளான்  ஒற்றித்  தியாகப்  பெருமான்  பிச்சைப்  பெருமானே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com