திருவருட்பா  23. திருச்சாதனத் தெய்வத் திறம்

உடையாய்உன்  அடியவர்க்கும்  அவர்மேல்  பூண்ட 
ஒண்மணியாம்  கண்மணிக்கும்  ஓங்கு  சைவ 
அடையாளம்  என்னஒளிர்  வெண்ற்  றுக்கும் 
அன்பிலேன்  அஞ்சாமல்  அந்தோ  அந்தோ 
நடையாய  உடல்  முழுதும்  நாவாய்  நின்று 
நவில்கின்றேன்  என்பாவி  நாவைச்  சற்றும் 
இடையாத  கொடுந்தீயால்  கடினும்  அன்றி 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
1
கண்ணுதலே  நின்அடியார்  தமையும்  நோக்கேன் 
கண்மணிமா  லைக்கெனினும்  கனிந்து  நில்லேன் 
பண்ணுதல்சேர்  திருநீற்றுக்  கோலம்  தன்னைப் 
பார்த்தேனும்  அஞ்சுகிலேன்  பயனி  லாமே 
நண்ணுதல்சேர்  உடம்பெல்லாம்  நாவாய்  நின்று 
நவில்கின்றேன்  என்கொடிய  நாவை  அந்தோ 
எண்ணுதல்சேர்  கொடுந்தீயால்  சுடினும்  அன்றி 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
2
வஞ்சமிலார்  நெஞ்சகத்தே  மருவும்  முக்கண் 
மாமணியே  உனைநினையேன்  வாளா  நாளைக் 
கஞ்சமலர்  முகத்தியர்க்கும்  வாதில்  தோன்றும் 
களிப்பினுக்கும்  கழிக்கின்றேன்  கடைய  னேனை 
நஞ்சமுணக்  கொடுத்துமடித்  திடினும்  வாளால் 
நசிப்புறவே  துணித்திடினும்  நலியத்  தீயால் 
எஞ்சலுறச்  சுடினும்அன்றி  அந்தோ  இன்னும் 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
3
அருள்பழுக்கும்  கற்பகமே  அரசே  முக்கண் 
ஆரமுதே  நினைப்புகழேன்  அந்தோ  வஞ்ச 
மருள்பழுக்கும்  நெஞ்சகத்தேன்  வாளா  நாளை 
வாதமிட்டுக்  கழிக்கின்றேன்  மதியி  லேனை 
வெருள்பழுக்கும்  கடுங்காட்டில்  விடினும்  ஆற்று 
வெள்ளத்தில்  அடித்தேக  விடினும்  பொல்லா 
இருள்பழுக்கும்  பிலஞ்சேர  விடினும்  அன்றி 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
4
பெருங்கருணைக்  கடலேஎன்  குருவே  முக்கண் 
பெருமானே  நினைப்புகழேன்  பேயேன்  அந்தோ 
கருங்கல்மனக்  குரங்காட்டி  வாளா  நாளைக் 
கழிக்கின்றேன்  பயன்அறியாக்  கடைய  னேனை 
ஒருங்குருள  உடல்பதைப்ப  உறுங்குன்  றேற்றி 
உருட்டுகினும்  உயிர்நடுங்க  உள்ளம்  ஏங்க 
இருங்கழுவில்  ஏற்றுகினும்  அன்றி  இன்னும் 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
5
தொழுகின்றோர்  உளத்தமர்ந்த  சுடரே  முக்கண் 
சுடர்க்கொழுந்தே  நின்பதத்தைத்  துதியேன்  வாதில் 
விழுகின்றேன்  நல்லோர்கள்  வெறுப்பப்  பேசி 
வெறித்துழலும்  நாயனையேன்  விழல  னேனை 
உழுகின்ற  நுகப்படைகொண்  டுலையத்  தள்ளி 
உழக்கினும்நெட்  டுடல்நடுங்க  உறுக்கி  மேன்மேல் 
எழுகின்ற  கடலிடைவீழ்த்  திடினும்  அன்றி 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
6
விருப்பாகும்  மதிச்சடையாய்  விடையாய்  என்றே 
மெய்யன்போ  டுனைத்துதியேன்  விரைந்து  வஞ்சக் 
கருப்பாயும்  விலங்கெனவே  வளர்ந்தே  நாளைக் 
கழிக்கின்றேன்  கருநெஞ்சக்  கள்வ  னேனைப் 
பொருப்பாய  யானையின்  கால்  இடினும்  பொல்லாப் 
புழுத்தலையில்  சோரிபுறம்  பொழிய  நீண்ட 
இருப்பாணி  ஏற்றுகினும்  அன்றி  இன்னும் 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
7
அக்கநுதல்  பிறைச்சடையாய்  நின்தாள்  ஏத்தேன் 
ஆண்பனைபோல்  மிகநீண்டேன்  அறிவொன்  றில்லேன் 
மிக்கஒதி  போல்பருத்தேன்  கருங்க  டாப்போல் 
வீண்கருமத்  துழல்கின்றேன்  விழல  னேனைச் 
செக்கிடைவைத்  துடல்குழம்பிச்  சிதைய  அந்தோ 
திருப்பிடினும்  இருப்பறைமுட்  சேரச்  சேர்த்து 
எக்கரிடை  உருட்டுகினும்  அன்றி  இன்னும் 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
8
அன்புடன்நின்  பதம்புகழாப்  பாவி  நாவை 
அறத்துணியேன்  நின்அழகை  அமர்ந்து  காணாத் 
துன்புறுகண்  இரண்டினையும்  சூன்றேன்  நின்னைத் 
தொழாக்கையை  வாளதனால்  துண்ட  மாக்கேன் 
வன்பறநின்  தனைவணங்காத்  தலையை  அந்தோ 
மடித்திலேன்  ஒதியேபோல்  வளர்ந்தேன்  என்னை 
இன்பறுவல்  எரியிடைவீழ்த்  திடினும்  அன்றி 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
9
தேவேநின்  அடிநினையா  வஞ்ச  நெஞ்சைத் 
தீமூட்டிச்  சிதைக்கறியேன்  செதுக்கு  கில்லேன் 
கோவேநின்  அடியர்தமைக்  கூடாப்  பொய்மைக் 
குடிகொண்டேன்  புலைகொண்ட  கொடியேன்  அந்தோ 
நாவேற  நினைத்துதியேன்  நலமொன்  றில்லேன் 
நாய்க்கடைக்கும்  கடைப்பட்டேன்  நண்ணு  கின்றோர்க் 
கீவேதும்  அறியேன்இங்  கென்னை  யந்தோ 
என்செயினும்  போதாதே  எந்தாய்  எந்தாய். 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com