
கருணைமா நிதியே என்னிரு கண்ணே
கடவுளே கடவுளே என்கோ
தருணவான் அமுதே என்பெருந் தாயே
தந்தையே தந்தையே என்கோ
தெருள்நிறை மதியே என்குரு பதியே
தெய்வமே தெய்வமே என்கோ
அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
ஆண்டவ நின்றனை அறிந்தே.
ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு
விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
பெரியவர் வைத்ததோர் தங்கக்
கட்டியே என்கோ அம்பலத் தாடும்
கருணையங் கடவுள்நின் றனையே.
துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
சோதியுட் சோதியே என்கோ
அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
அம்மையே அப்பனே என்கோ
இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
என்உயிர்க் கின்னமு தென்கோ
என்பொலா மணியே என்கணே என்கோ
என்னுயிர் நாதநின் றனையே.
கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
கணவனே கணவனே என்கோ
ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
ஒருதனிப் பெரியனே என்கோ
திருத்தனே எனது செல்வமே எல்லாம்
செயவல்ல சித்தனே என்கோ
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
நிறைஅருட் சோதிநின் றனையே.
தாயனே எனது தாதையே ஒருமைத்
தலைவனே தலைவனே என்கோ
பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
பெருந்தகைப் பெரும்பதி என்கோ
சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
சித்தெலாம் வல்லசித் தென்கோ
தூயனே எனது நேயனே என்கோ
சோதியுட் சோதிநின் றனையே.
அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
ஆனந்தத் தனிமலர் என்கோ
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
கடையனேன் உடையநெஞ் சகமாம்
இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
சோதியுட் சோதிநின் றனையே.
தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
சர்க்கரை அமுதமே என்கோ
மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
முகநகைக் கணவனே என்கோ
போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
புணர்ந்தஓர் பூவையே என்கோ
ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
அம்பலத் தாடிநின் றனையே.
தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
தனில்உறும் அனுபவம் என்கோ
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
ஓங்கிய ஒருமையே என்கோ
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
திருச்சிற்றம் பலத்தவ நினையே.
யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
ஓங்கிய காட்சியே என்கோ
ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
இசைந்தபே ரின்பமே என்கோ
சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
சார்ந்தசற் குருமணி என்கோ
மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
இயற்கையுள் இயற்கையே என்கோ
வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்
வயங்கிய வான்பொருள் என்கோ
திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
செய்ததோர் சித்தனே என்கோ
கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
களித்தளித் தருளிய நினையே.



