திருவருட்பா  48. ஆண்டருளிய அருமையை வியத்தல்

அம்பலத்  தாடும்  அமுதமே  என்கோ 
அடியனேன்  ஆருயிர்  என்கோ 
எம்பலத்  தெல்லாம்  வல்லசித்  தென்கோ 
என்னிரு  கண்மணி  என்கோ 
நம்பிடில்  அணைக்கும்  நற்றுணை  என்கோ 
நான்பெற்ற  பெருஞ்செல்வம்  என்கோ 
இம்பர்இப்  பிறப்பே  மெய்ப்பிறப்  பாக்கி 
என்னைஆண்  டருளிய  நினையே. 
1
அம்மையே  என்கோ  அப்பனே  என்கோ 
அருட்பெருஞ்  சோதியே  என்கோ 
செம்மையே  எல்லாம்  வல்லசித்  தென்கோ 
திருச்சிற்றம்  பலத்தமு  தென்கோ 
தம்மையே  உணர்ந்தார்  உளத்தொளி  என்கோ 
தமியனேன்  தனித்துணை  என்கோ 
இம்மையே  அழியாத்  திருஉரு  அளித்திங் 
கென்னைஆண்  டருளிய  நினையே. 
2
எய்ப்பிலே  கிடைத்த  வைப்பது  என்கோ 
என்னுயிர்க்  கின்பமே  என்கோ 
துய்ப்பிலே  நிறைந்த  பெருங்களிப்  பென்கோ 
சோதியுட்  சோதியே  என்கோ 
தப்பெலாம்  பொறுத்த  தயாநிதி  என்கோ 
தனிப்பெருந்  தலைவனே  என்கோ 
இப்பிறப்  பதிலே  மெய்ப்பயன்  அளித்திங் 
கென்னைஆண்  டருளிய  நினையே. 
3
அச்சம்நீக்  கியஎன்  ஆரியன்  என்கோ 
அம்பலத்  தெம்பிரான்  என்கோ 
நிச்சலும்  எனக்கே  கிடைத்தவாழ்  வென்கோ 
நீடும்என்  நேயனே  என்கோ 
பிச்சனேற்  களித்த  பிச்சனே  என்கோ 
பெரியரிற்  பெரியனே  என்கோ 
இச்சகத்  தழியாப்  பெருநலம்  அழித்திங் 
கென்னைஆண்  டருளிய  நினையே. 
4
அத்தம்நேர்  கிடைத்த  சுவைக்கனி  என்கோ 
அன்பிலே  நிறைஅமு  தென்கோ 
சித்தெலாம்  வல்ல  சித்தனே  என்கோ 
திருச்சிற்றம்  பலச்சிவம்  என்கோ 
மத்தனேன்  பெற்ற  பெரியவாழ்  வென்கோ 
மன்னும்என்  வாழ்முதல்  என்கோ 
இத்தனிப்  பிறப்பை  நித்தியம்  ஆக்கி 
என்னைஆண்  டருளிய  நினையே. 
5
மறப்பெலாம்  தவிர்த்த  மதிஅமு  தென்கோ 
மயக்கநீத்  தருள்மருந்  தென்கோ 
பறப்பெலாம்  ஒழித்த  பதிபதம்  என்கோ 
பதச்சுவை  அனுபவம்  என்கோ 
சிறப்பெலாம்  எனக்கே  செய்ததாய்  என்கோ 
திருச்சிற்றம்  பலத்தந்தை  என்கோ 
இறப்பிலா  வடிவம்  இம்மையே  அளித்திங் 
கென்னைஆண்  டருளிய  நினையே. 
6
அன்பிலே  பழுத்த  தனிப்பழம்  என்கோ 
அறிவிலே  அறிவறி  வென்கோ 
இன்பிலே  நிறைந்த  சிவபதம்  என்கோ 
என்னுயிர்த்  துணைப்பதி  என்கோ 
வன்பிலா  மனத்தே  வயங்கொளி  என்கோ 
மன்னும்அம்  பலத்தர  சென்கோ 
என்புரி  அழியாப்  பொன்புரி  ஆக்கி 
என்னைஆண்  டருளிய  நினையே. 
7
தடையிலா  தெடுத்த  அருளமு  தென்கோ 
சர்க்கரைக்  கட்டியே  என்கோ 
அடைவுறு  வயிரக்  கட்டியே  என்கோ 
அம்பலத்  தாணிப்பொன்  என்கோ 
உடைய  மாணிக்கப்  பெருமலை  என்கோ 
உள்ளொளிக்  குள்ளொளி  என்கோ 
இடைதல்அற்  றோங்கும்  திருஅளித்  திங்கே 
என்னைஆண்  டருளிய  நினையே. 
8
மறைமுடி  விளங்கு  பெரும்பொருள்  என்கோ 
மன்னும்ஆ  கமப்பொருள்  என்கோ 
குறைமுடித்  தருள்செய்  தெய்வமே  என்கோ 
குணப்பெருங்  குன்றமே  என்கோ 
பிறைமுடிக்  கணிந்த  பெருந்தகை  என்கோ 
பெரியஅம்  பலத்தர  சென்கோ 
இறைமுடிப்  பொருள்என்  உளம்பெற  அளித்திங் 
கென்னைஆண்  டருளிய  நினையே. 
9
என்உளம்  பிரியாப்  பேரொளி  என்கோ 
என்உயிர்த்  தந்தையே  என்கோ 
என்உயிர்த்  தாயே  இன்பமே  என்கோ 
என்உயிர்த்  தலைவனே  என்கோ 
என்உயிர்  வளர்க்கும்  தனிஅமு  தென்கோ 
என்னுடை  நண்பனே  என்கோ 
என்ஒரு  வாழ்வின்  தனிமுதல்  என்கோ 
என்னைஆண்  டருளிய  நினையே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com