திருவருட்பா  36. உண்மை கூறல்

தனிப்பெருந்  தலைவரே  தாயவ  ரேஎன் 
தந்தைய  ரேபெருந்  தயவுடை  யவரே 
பனிப்பறுத்  தெனையாண்ட  பரம்பர  ரேஎம் 
பார்வதி  புரஞானப்  பதிசிதம்  பரரே 
இனிச்சிறு  பொழுதேனுந்  தாழ்த்திடல்  வேண்டா 
இறையவ  ரேஉமை  இங்குகண்  டல்லால் 
அனிச்சய  உலகினைப்  பார்க்கவும்  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
1
பெறுவது  நுமைஅன்றிப்  பிறிதொன்றும்  விரும்பேன் 
பேசல்நும்  பேச்சன்றிப்  பிறிதொன்றும்  பேசேன் 
உறுவதுநும்  அருள்அன்றிப்  பிரிதொன்றும்  உவவேன் 
உன்னல்உம்  திறன்அன்றிப்  பிரிதொன்றும்  உன்னேன் 
மறுநெறி  தீர்த்தெனை  வாழ்வித்துக்  கொண்டீர் 
வள்ளலே  நும்திரு  வரவுகண்  டல்லால் 
அறுசுவை  உண்டிகொண்  டருந்தவும்  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
2
கரும்பிடை  இரதமும்  கனியில்இன்  சுவையும் 
காட்டிஎன்  உள்ளம்  கலந்தினிக்  கின்றீர் 
விரும்பிநும்  பொன்னடிக்  காட்பட்டு  நின்றேன் 
மேல்விளை  வறிகிலன்  விச்சைஒன்  றில்லேன் 
துரும்பினும்  சிறியனை  அன்றுவந்  தாண்டீர் 
தூயநும்  பேரருட்  சோதிகண்  டல்லால் 
அரும்பெறல்  உண்டியை  விரும்பவும்  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
3
தடுத்தெனை  ஆட்கொண்ட  தந்தைய  ரேஎன் 
தனிப்பெருந்  தலைவரே  சபைநடத்  தவரே 
தொடுத்தொன்று  சொல்கிலேன்  சொப்பனத்  தேனும் 
தூயநும்  திருவருள்  நேயம்விட்  டறியேன் 
விடுத்திடில்  என்னைநீர்  விடுப்பன்என்  உயிரை 
வெருவுளக்  கருத்தெல்லாம்  திருவுளத்  தறிவீர் 
அடுத்தினிப்  பாயலில்  படுக்கவும்  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
4
காசையும்  பணத்தையும்  கன்னியர்  தமையும் 
காணியின்  ஆட்சியும்  கருதிலேன்  கண்டீர் 
நேசநும்  திருவருள்  நேசம்ஒன்  றல்லால் 
நேசம்மற்  றிலைஇது  நீர்அறி  யீரோ 
ஏசறல்  அகற்றிவந்  தென்னைமுன்  ஆண்டீர் 
இறையவ  ரேஉமை  இன்றுகண்  டல்லால் 
ஆசையிற்  பிறரொடு  பேசவும்  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
5
என்பொருள்  என்உடல்  என்உயிர்  எல்லாம் 
ஈந்தனன்  உம்மிடத்  தெம்பெரு  மானீர் 
இன்பொடு  வாங்கிக்கொண்  டென்னையாட்  கொண்டீர் 
என்செயல்  ஒன்றிலை  யாவும்நும்  செயலே 
வன்பொடு  நிற்கிலீர்  என்பொடு  கலந்தீர் 
வள்ளலே  நும்திரு  வரவுகண்  டல்லால் 
அன்பொடு  காண்பாரை  முன்பிட  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
6
திருந்தும்என்  உள்ளத்  திருக்கோயில்  ஞான 
சித்தி  புரம்எனச்  சத்தியம்  கண்டேன் 
இருந்தருள்  கின்றநீர்  என்னிரு  கண்கள் 
இன்புற  அன்றுவந்  தெழில்உருக்  காட்டி 
வருந்தலை  என்றெனைத்  தேற்றிய  வாறே 
வள்ளலே  இன்றுநும்  வரவுகண்  டல்லால் 
அருந்தவர்  நேரினும்  பொருந்தவும்  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
7
கரைக்கணம்  இன்றியே  கடல்நிலை  செய்தீர் 
கருணைக்  கடற்குக்  கரைக்கணஞ்  செய்யீர் 
உரைக்கண  வாத  உயர்வுடை  யீர்என் 
உரைக்கண  விப்பல  உதவிசெய்  கின்றீர் 
வரைக்கண  எண்குண  மாநிதி  ஆனீர் 
வாய்மையில்  குறித்தநும்  வரவுகண்  டல்லால் 
அரைக்கணம்  ஆயினும்  தரித்திட  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
8
மடுக்கநும்  பேரருள்  தண்அமு  தெனக்கே 
மாலையும்  காலையும்  மத்தியா  னத்தும் 
கடுக்கும்  இரவினும்  யாமத்தும்  விடியற் 
காலையி  னுந்தந்தென்  கடும்பசி  தீர்த்து 
எடுக்குநற்  றாயொடும்  இணைந்துநிற்  கின்றீர் 
இறையவ  ரேஉம்மை  இங்குகண்  டல்லால் 
அடுக்கவீழ்  கலைஎடுத்  துடுக்கவும்  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
9
கறுத்துரைக்  கின்றவர்  களித்துரைக்  கின்ற 
காலைஈ  தென்றே  கருத்துள்  அறிந்தேன் 
நிறுத்துரைக்  கின்றபல்  நேர்மைகள்  இன்றி 
நீடொளிப்  பொற்பொது  நாடகம்  புரிவீர் 
செறுத்துரைக்  கின்றவர்  தேர்வதற்  கரியீர் 
சிற்சபை  யீர்எனைச்  சேர்ந்திடல்  வேண்டும் 
அறுத்துரைக்  கின்றேன்நான்  பொறுத்திட  மாட்டேன் 
அருட்பெருஞ்  சோதியீர்  ஆணைநும்  மீதே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com