திருவருட்பா  24. வாதனைக் கழிவு

பொழுது  விடிந்த  தினிச்சிறிதும்  பொறுத்து  முடியேன்  எனநின்றே 
அழுது  விழிகள்  நீர்துளும்பக்  கூவிக்  கூவி  அயர்கின்றேன் 
பழுது  தவிர்க்கும்  திருச்செவிக்குள்  பட்ட  திலையோ  பலகாலும் 
உழுது  களைத்த  மாடனையேன்  துணைவே  றறியேன்  உடையானே. 
1
உடையாய்  திருஅம்  பலத்தாடல்  ஒருவா  ஒருவா  உலவாத 
கொடையாய்  எனநான்  நின்றனையே  கூவிக்  கூவி  அயர்கின்றேன் 
தடையா  யினதீர்த்  தருளாதே  தாழ்க்கில்  அழகோ  புலைநாயிற் 
கடையாய்த்  திரிந்தேன்  கலங்குதல்சம்  மதமோ  கருணைக்  கருத்தினுக்கே. 
2
கருணைக்  கருத்து  மலர்ந்தெனது  கலக்க  மனைத்துந்  தவிர்த்தேஇத் 
தருணத்  தருளா  விடில்அடியேன்  தரியேன்  தளர்வேன்  தளர்வதுதான் 
அருணச்  சுடரே  நின்னருளுக்  கழகோ  அழகென்  றிருப்பாயேல் 
தெருணற்  பதஞ்சார்  அன்பரெலாம்  சிரிப்பார்  நானும்  திகைப்பேனே. 
3
திகைப்பார்  திகைக்க  நான்சிறிதும்  திகையேன்  எனநின்  திருவடிக்கே 
வகைப்பா  மாலை  சூட்டுகின்றேன்  மற்றொன்  றறியேன்  சிறியேற்குத் 
தகைப்பா  ரிடைஇத்  தருணத்தே  தாராய்  எனிலோ  பிறரெல்லாம் 
நகைப்பார்  நகைக்க  உடம்பினைவைத்  திருத்தல்  அழகோ  நாயகனே. 
4
நாயிற்  கடையேன்  கலக்கமெலாம்  தவிர்த்து  நினது  நல்லருளை 
ஈயிற்  கருணைப்  பெருங்கடலே  என்னே  கெடுவ  தியற்கையிலே 
தாயிற்  பெரிதும்  தயவுடையான்  குற்றம்  புரிந்தோன்  தன்னையும்ஓர் 
சேயிற்  கருதி  அணைத்தான்என்  றுரைப்பா  ருனைத்தான்  தெரிந்தோரே. 
5
தெரிந்த  பெரியர்க்  கருள்புரிதல்  சிறப்பென்  றுரைத்த  தெய்வமறை 
திரிந்த  சிறியர்க்  கருள்புரிதல்  சிறப்பிற்  சிறப்பென்  றுரைத்தனவே 
புரிந்தம்  மறையைப்  புகன்றவனும்  நீயே  என்றால்  புண்ணியனே 
விரிந்த  மனத்துச்  சிறியேனுக்  கிரங்கி  அருளல்  வேண்டாவோ. 
6
வேண்டார்  உளரோ  நின்னருளை  மேலோ  ரன்றிக்  கீழோரும் 
ஈண்டார்  வதற்கு  வேண்டினரால்  இன்று  புதிதோ  யான்வேண்டல் 
தூண்டா  விளக்கே  திருப்பொதுவிற்  சோதி  மணியே  ஆறொடுமூன் 
றாண்டா  வதிலே  முன்னென்னை  ஆண்டாய்  கருணை  அளித்தருளே. 
7
அருளே  வடிவாம்  அரசேநீ  அருளா  விடில்இவ்  வடியேனுக் 
கிருளே  தொலைய  அருளளிப்பார்  எவரே  எல்லாம்  வல்லோய்நின் 
பொருளேய்  வடிவிற்  கலைஒன்றே  புறத்தும்  அகத்தும்  புணர்ந்தெங்குந் 
தெருளே  யுறஎத்  தலைவருக்குஞ்  சிறந்த  அருளாய்த்  திகழ்வதுவே. 
8
திகழ்ந்தார்  கின்ற  திருப்பொதுவில்  சிவமே  நின்னைத்  தெரிந்துகொண்டு 
புகழ்ந்தார்  தம்மைப்  பொறுத்திடவும்  புன்மை  அறிவால்  பொய்உரைத்தே 
இகழ்ந்தேன்  தனைக்கீழ்  வீழ்த்திடவும்  என்னே  புவிக்கிங்  கிசைத்திலைநீ 
அகழ்ந்தார்  தமையும்  பொறுக்கஎன  அமைத்தாய்  எல்லாம்  அமைத்தாயே. 
9
எல்லாம்  வகுத்தாய்  எனக்கருளில்  யாரே  தடுப்பார்  எல்லாஞ்செய் 
வல்லான்  வகுத்த  வண்ணம்என  மகிழ்வார்  என்கண்  மணியேஎன் 
சொல்லா  னவையும்  அணிந்துகொண்ட  துரையே  சோதித்  திருப்பொதுவில் 
நல்லாய்  கருணை  நடத்தரசே  தருணம்  இதுநீ  நயந்தருளே. 
10
நயந்த  கருணை  நடத்தரசே  ஞான  அமுதே  நல்லோர்கள் 
வியந்த  மணியே  மெய்யறிவாம்  விளக்கே  என்னை  விதித்தோனே 
கயந்த  மனத்தேன்  எனினும்மிகக்  கலங்கி  நரகக்  கடுங்கடையில் 
பயந்த  பொழுதும்  தாழ்த்திருத்தல்  அழகோ  கடைக்கண்  பார்த்தருளே. 
11
பார்த்தார்  இரங்கச்  சிறியேன்நான்  பாவி  மனத்தால்  பட்டதுயர் 
தீர்த்தாய்  அந்நாள்  அதுதொடங்கித்  தெய்வந்  துணைஎன்  றிருக்கின்றேன் 
சேர்த்தார்  உலகில்  இந்நாளில்  சிறியேன்  தனைவெந்  துயர்ப்பாவி 
ஈர்த்தால்  அதுகண்  டிருப்பதுவோ  கருணைக்  கழகிங்  கெந்தாயே. 
12
தாயே  எனைத்தான்  தந்தவனே  தலைவா  ஞான  சபாபதியே 
பேயேன்  செய்த  பெருங்குற்றம்  பொறுத்தாட்  கொண்ட  பெரியோனே 
நீயே  இந்நாள்  முகமறியார்  நிலையில்  இருந்தால்  நீடுலகில் 
நாயே  அனையேன்  எவர்துணைஎன்  றெங்கே  புகுவேன்  நவிலாயே. 
13
ஆயேன்  வேதா  கமங்களைநன்  கறியேன்  சிறியேன்  அவலமிகும் 
பேயேன்  எனினும்  வலிந்தென்னைப்  பெற்ற  கருணைப்  பெருமானே 
நீயே  அருள  நினைத்தாயேல்  எல்லா  நலமும்  நிரம்புவன்நான் 
காயே  எனினும்  கனிஆகும்  அன்றே  நினது  கருணைக்கே. 
14
கருணா  நிதியே  என்இரண்டு  கண்ணே  கண்ணிற்  கலந்தொளிரும் 
தெருணா  டொளியே  வெளியேமெய்ச்  சிவமே  சித்த  சிகாமணியே 
இருணா  டுலகில்  அறிவின்றி  இருக்கத்  தரியேன்  இதுதருணம் 
தருணா  அடியேற்  கருட்சோதி  தருவாய்  என்முன்  வருவாயே. 
15
வருவாய்  என்கண்  மணிநீஎன்  மனத்திற்  குறித்த  வண்ணமெலாம் 
தருவாய்  தருணம்  இதுவேமெய்த்  தலைவா  ஞான  சபாபதியே 
உருவாய்  சிறிது  தாழ்க்கில்உயிர்  ஒருவும்  உரைத்தேன்  என்னுடைவாய் 
இருவாய்  அலநின்  திருவடிப்பாட்  டிசைக்கும்  ஒருவாய்  இசைத்தேனே. 
16
தேனே  திருச்சிற்  றம்பலத்தில்  தெள்ளா  ரமுதே  சிவஞான 
வானே  ஞான  சித்தசிகா  மணியே  என்கண்  மணியேஎன் 
ஊனே  புகுந்தென்  உளங்கலந்த  உடையாய்  அடியேன்  உவந்திடநீ 
தானே  மகிழ்ந்து  தந்தாய்இத்  தருணம்  கைம்மா  றறியேனே. 
17
அறியேன்  சிறியேன்  செய்தபிழை  அனைத்தும்  பொறுத்தாய்  அருட்சோதிக் 
குறியே  குணமே  பெறஎன்னைக்  குறிக்கொண்  டளித்தாய்  சன்மார்க்க 
நெறியே  விளங்க  எனைக்கலந்து  நிறைந்தாய்  நின்னை  ஒருகணமும் 
பிறியேன்  பிறியேன்  இறவாமை  பெற்றேன்  உற்றேன்  பெருஞ்சுகமே. 
18
சுகமே  நிரம்பப்  பெருங்கருணைத்  தொட்டில்  இடத்தே  எனைஅமர்த்தி 
அகமே  விளங்கத்  திருஅருளா  ரமுதம்  அளித்தே  அணைத்தருளி 
முகமே  மலர்த்திச்  சித்திநிலை  முழுதும்  கொடுத்து  மூவாமல் 
சகமேல்  இருக்கப்  புரிந்தாயே  தாயே  என்னைத்  தந்தாயே. 
19
தந்தாய்  இன்றும்  தருகின்றாய்  தருவாய்  மேலுந்  தனித்தலைமை 
எந்தாய்  நினது  பெருங்கருணை  என்என்  றுரைப்பேன்  இவ்வுலகில் 
சிந்தா  குலந்தீர்த்  தருள்எனநான்  சிறிதே  கூவு  முன்என்பால் 
வந்தாய்  கலந்து  மகிழ்கின்றாய்  எனது  பொழுது  வான்பொழுதே. 
20

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com