
Arutperunjoti Akaval Audio
0:00
0:00
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின்று ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ் ஜோதி
ஈனமின்றி இகபரத்து இரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
உரைமனம் கடந்த ஒருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ் ஜோதி
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் ஜோதி
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ் ஜோதி
ஐயமும் திரிபும் அறுத்தெனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
ஒன்றென இரண்டென ஒன்று இரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ் ஜோதி
ஓதா துணர்ந்திட ஒளிஅளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
ஒளவியம் ஆதிஓர் ஆறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி
சுத்தசன் மார்க்கச் சுகத்தனி வெளிஎனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சுத்தமெய்ஞ் ஞானச் சுகோதய வெளிஎனும்
அத்து விதச்சபை அருட்பெருஞ் ஜோதி
தூய கலாந்தச் சுகந்தரு வெளிஎனும்
ஆயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
ஞானயோ காந்த நடத்திரு வெளிஎனும்
ஆனியில் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
விமல போதாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும்
அமலசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
பெரிய நாதாந்தப் பெருநிலை வெளிஎனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளிஎனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சுத்தசித் தாந்தச் சுகப்பெரு வெளிஎனும்
அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளிஎனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ் ஜோதி
தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்
அத்திரு அம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சச்சிதா னந்தத் தனிப்பர வெளிஎனும்
அச்சியல் அம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளிஎனும்
ஆகா யத்தொளிர் அருட்பெருஞ் ஜோதி
காரண காரியம் காட்டிடு வெளிஎனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும்
ஆகமச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
வேதாக மங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாம்சபை அருட்பெருஞ் ஜோதி
என்றா தியசுடர்க்கு இயனிலை ஆய்அது
அன்றாம் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி
சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி
முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்தருள்
அச்சுட ராம்சபை அருட்பெருஞ் ஜோதி
துரியமும் கடந்த சுக பூரணந்தரும்
அரிய சிற்றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள்
அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
இயற்கைஉண் மையதாய் இயற்கை இன் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சுட்டுதற் கரிதாம் சுகாதீத வெளிஎனும்
அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
நவந்தவிர் நிலைகளும் நண்ணும்ஓர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
உபயபக் கங்களும் ஒன்றெனக் காட்டிய
அபயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
சேகரமாம் பல சித்தி நிலைக்கெலாம்
ஆகரமாம் சபை அருட்பெருஞ் ஜோதி
மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்
ஆதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
வாரமும் அழியா வரமும் தரும் திரு
ஆரமுதாம் சபை அருட்பெருஞ் ஜோதி
இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள்
அழியாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி
எனைத்தும் துன்பிலா இயல்அளித்து எண்ணிய
அனைத்தும் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி
பாணிப் பிலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி
ஆணிப் பொன்னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எம்பலம் எனத்தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி
அம்பலத் தாடல்செய் அருட்பெருஞ் ஜோதி
தம்பர ஞான சிதம்பரம் எனும்ஓர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் ஜோதி




