திருவருட்பா  15. திருவடி முறையீடு

சீரிடம்  பெறும்ஓர்  திருச்சிற்றம்  பலத்தே 
திகழ்தனித்  தந்தையே  நின்பால் 
சேரிடம்  அறிந்தே  சேர்ந்தனன்  கருணை 
செய்தருள்  செய்திடத்  தாழ்க்கில் 
யாரிடம்  புகுவேன்  யார்துணை  என்பேன் 
யார்க்கெடுத்  தென்குறை  இசைப்பேன் 
போரிட  முடியா  தினித்துய  ரொடுநான் 
பொறுக்கலேன்  அருள்கஇப்  போதே. 
1
போதுதான்  விரைந்து  போகின்ற  தருள்நீ 
புரிந்திடத்  தாழ்த்தியேல்  ஐயோ 
யாதுதான்  புரிவேன்  யாரிடம்  புகுவேன் 
யார்க்கெடுத்  தென்குறை  இசைப்பேன் 
தீதுதான்  புரிந்தேன்  எனினும்நீ  அதனைத் 
திருவுளத்  தடைத்திடு  வாயேல் 
ஈதுதான்  தந்தை  மரபினுக்  கழகோ 
என்னுயிர்த்  தந்தைநீ  அலையோ. 
2
தந்தைநீ  அலையோ  தனயன்நான்  அலனோ 
தமியனேன்  தளர்ந்துளங்  கலங்கி 
எந்தையே  குருவே  இறைவனே  முறையோ 
என்றுநின்  றோலிடு  கின்றேன் 
சிந்தையே  அறியார்  போன்றிருந்  தனையேல் 
சிறியனேன்  என்செய்கேன்  ஐயோ 
சந்தையே  புகுந்த  நாயினில்  கடையேன் 
தளர்ச்சியைத்  தவிர்ப்பவர்  யாரோ. 
3
யாரினும்  கடையேன்  யாரினும்  சிறியேன் 
என்பிழை  பொறுப்பவர்  யாரே 
பாரினும்  பெரிதாம்  பொறுமையோய்  நீயே 
பாவியேன்  பிழைபொறுத்  திலையேல் 
ஊரினும்  புகுத  ஒண்ணுமோ  பாவி 
உடம்பைவைத்  துலாவவும்  படுமோ 
சேரினும்  எனைத்தான்  சேர்த்திடார்  பொதுவாம் 
தெய்வத்துக்  கடாதவன்  என்றே. 
4
அடாதகா  ரியங்கள்  செய்தனன்  எனினும் 
அப்பநீ  அடியனேன்  தன்னை 
விடாதவா  றறிந்தே  களித்திருக்  கின்றேன் 
விடுதியோ  விட்டிடு  வாயேல் 
உடாதவெற்  றரைநேர்ந்  துயங்குவேன்  ஐயோ 
உன்னருள்  அடையநான்  இங்கே 
படாதபா  டெல்லாம்  பட்டனன்  அந்தப் 
பாடெலாம்  நீஅறி  யாயோ. 
5
அறிந்திலை  யோஎன்  பாடெலாம்  என்றே 
அழைத்தனன்  அப்பனே  என்னை 
எறிந்திடா  திந்தத்  தருணமே  வந்தாய் 
எடுத்தணைத்  தஞ்சிடேல்  மகனே 
பிறிந்திடேம்  சிறிதும்  பிறிந்திடேம்  உலகில் 
பெருந்திறல்  சித்திகள்  எல்லாம் 
சிறந்திட  உனக்கே  தந்தனம்  எனஎன் 
சென்னிதொட்  டுரைத்தனை  களித்தே. 
6
களித்தென  துடம்பில்  புகுந்தனை  எனது 
கருத்திலே  அமர்ந்தனை  கனிந்தே 
தெளித்தஎன்  அறிவில்  விளங்கினை  உயிரில் 
சிறப்பினால்  கலந்தனை  உள்ளம் 
தளிர்த்திடச்  சாகா  வரங்கொடுத்  தென்றும் 
தடைபடாச்  சித்திகள்  எல்லாம் 
அளித்தனை  எனக்கே  நின்பெருங்  கருணை 
அடியன்மேல்  வைத்தவா  றென்னே. 
7
என்நிகர்  இல்லா  இழிவினேன்  தனைமேல் 
ஏற்றினை  யாவரும்  வியப்பப் 
பொன்இயல்  வடிவும்  புரைபடா  உளமும் 
பூரண  ஞானமும்  பொருளும் 
உன்னிய  எல்லாம்  வல்லசித்  தியும்பேர் 
உவகையும்  உதவினை  எனக்கே 
தன்னிகர்  இல்லாத்  தலைவனே  நினது 
தயவைஎன்  என்றுசாற்  றுவனே. 
8
சாற்றுவேன்  எனது  தந்தையே  தாயே 
சற்குரு  நாதனே  என்றே 
போற்றுவேன்  திருச்சிற்  றம்பலத்  தாடும் 
பூரணா  எனஉல  கெல்லாம் 
தூற்றுவேன்  அன்றி  எனக்குநீ  செய்த 
தூயபேர்  உதவிக்கு  நான்என் 
ஆற்றுவேன்  ஆவி  உடல்பொருள்  எல்லாம் 
அப்பநின்  சுதந்தரம்  அன்றோ. 
9
சுதந்தரம்  உனக்கே  கொடுத்தனம்  உனது 
தூயநல்  உடம்பினில்  புகுந்தேம் 
இதந்தரும்  உளத்தில்  இருந்தனம்  உனையே 
இன்புறக்  கலந்தனம்  அழியாப் 
பதந்தனில்  வாழ்க  அருட்பெருஞ்  சோதிப் 
பரிசுபெற்  றிடுகபொற்  சபையும் 
சிதந்தரு  சபையும்  போற்றுக  என்றாய் 
தெய்வமே  வாழ்கநின்  சீரே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com