
சிவசிவ கஜமுக கணநா தா
சிவகண வந்தித குணநீ தா.
சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா.
அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே.
ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே.
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா.
அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா.
அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா.
அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.
தந்திர மந்திர யந்திரபாதா
சங்கர சங்கர சங்கர நாதா.
கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர.
சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண.
இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே.
என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே.
ஐயர் திருச்சபை ஆடக மே
ஆடுதல் ஆனந்த நாடக மே.
உத்தர ஞான சிதம்பர மே
சித்திஎ லாந்தரும் அம்பரமே.
அம்பல வாசிவ மாதே வா
வம்பல வாவிங்கு வாவா வா.
நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே.
ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
மானந்த போனகம் கொண்டோ மே.
சகள உபகள நிட்கள நாதா
உகள சததள மங்கள பாதா.
சந்தத மும்சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம்.
சங்கர மும்சிவ மாதே வா
எங்களை ஆட்கொள வாவா வா.
அரகர சிவசிவ மாதே வா
அருளமு தம்தர வாவா வா.
நடனசி காமணி நவமணி யே
திடனக மாமணி சிவமணி யே.
நடமிடும் அம்பல நன்மணி யே
புடமிடு செம்பல பொன்மணி யே.
உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.
நடராஜ வள்ளலை நாடுத லே
நம்தொழி லாம்விளை யாடுத லே.
அருட்பொது நடமிடு தாண்டவ னே
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.
நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.
நடராஜ பலமது நம்பல மே
நடமாடு வதுதிரு அம்பல மே.
நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.
அம்பல வாணணை நாடின னே
அவனடி யாரொடும் கூடின னே.
தம்பத மாம்புகழ் பாடின னே
தந்தன என்றுகூத் தாடின னே.
நான்சொன்ன பாடலும் கேட்டா ரே
ஞான சிதம்பர நாட்டா ரே.
இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
என்குரு மேல்ஆணை இட்டே னே.
இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.
சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.
நாதாந்த நாட்டுக்கு நாயக ரே
நடராஜ ரேசபா நாயக ரே.
நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நடராஜ எனில்வரும் நித்திய மே.
நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே
நல்வரம் ஈயும் தயாநிதி யே.
நடராஜர் தம்நடம் நன்னட மே
நடம்புரி கின்றதும் என்னிட மே.
சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
இறவா வரம்தரு நற்சபை யே
எனமறை புகழ்வது சிற்சபை யே.
என்இரு கண்ணுள் இருந்தவ னே
இறவா தருளும் மருந்தவ னே.
சிற்சபை அப்பனை உற்றே னே
சித்திஎ லாம்செயப் பெற்றே னே.



