
திருவருட்பா · 109உலகப்பேறு
ArutPerunJothi Vallalar Songs
இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்
அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன
பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில்
எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.




