
அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே.
தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே
இனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே
மனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்
அனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே.
திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே
உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்
குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே
மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே.
அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே.
தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட
குருவாய் விளங்கு மணிமன்ற வாணனைக் கூடிஇன்ப
உருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம்
திருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே.



