
அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்
அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள
வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே
பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே
தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே.
நின்பால் அறிவும் நின்செயலும் நீயும் பிறிதன் றெமதருளே
நெடிய விகற்ப உணர்ச்சிகொடு நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண்
அன்பால் உன்பால் ஒருமொழிதந் தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி
அளவா அறிவே உருவாக அமரென் றுணர்த்தும் அரும்பொருளே
இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை இருங்கடலே
இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியனிறைவே
தென்பால் விளங்குந் திருவோத்தூர் திகழும் மதுரச் செழுங்கனியே
தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ
ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்
என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே
நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே
தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
கண்மூன் றுடையான் எவன்அவனே கடவுள் அவன்தன் கருணைஒன்றே
கருணை அதனைக் கருதுகின்ற கருத்தே கருத்தாம் அக்கருத்தை
மண்மூன் றறக்கொண் டிருந்தவரே வானோர் வணங்கும் அருந்தவராம்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...



