திருவருட்பா  47. செவி அறிவுறுத்தல்

உலகியற்  கடுஞ்சுரத்  துழன்று  நாள்தொறும் 
அலகில்வெந்  துயர்கிளைத்  தழுங்கு  நெஞ்சமே 
இலகுசிற்  பரகுக  என்று  நீறிடில் 
கலகமில்  இன்பமாம்  கதிகி  டைக்குமே. 
1
மருளுறும்  உலகிலாம்  வாழ்க்கை  வேண்டியே 
இருளுறு  துயர்க்கடல்  இழியும்  நெஞ்சமே 
தெருளுறு  நீற்றினைச்  சிவஎன்  றுட்கொளில் 
அருளுறு  வாழ்க்கையில்  அமர்தல்  உண்மையே. 
2
வல்வினைப்  பகுதியால்  மயங்கி  வஞ்சர்தம் 
கொல்வினைக்  குழியிடைக்  குதிக்கும்  நெஞ்சமே 
இல்வினைச்  சண்முக  என்று  நீறிடில் 
நல்வினை  பழுக்கும்ஓர்  நாடு  வாய்க்குமே. 
3
கடும்புலைக்  கருத்தர்தம்  கருத்தின்  வண்ணமே 
விடும்புனல்  எனத்துயர்  விளைக்கும்  நெஞ்சமே 
இடும்புகழ்ச்  சண்முக  என்று  நீறிடில் 
நடுங்கும்அச்  சம்நினை  நண்ணற்  கென்றுமே. 
4
அன்பிலா  வஞ்சர்தம்  அவலச்  சூழலில் 
என்பிலாப்  புழுஎன  இரங்கு  நெஞ்சமே 
இன்பறாச்  சண்முக  என்று  நீறிடில் 
துன்புறாத்  தனிக்கதிச்  சூழல்  வாய்க்குமே. 
5
.  செறிவிலா  வஞ்சகச்  செல்வர்  வாயிலில் 
அறிவிலா  துழலும்என்  அவல  நெஞ்சமே 
எறிவிலாச்  சண்முக  என்று  நீறிடில் 
மறிவிலாச்  சிவகதி  வாயில்  வாய்க்குமே. 
6
மறிதரு  கண்ணினார்  மயக்கத்  தாழ்ந்துவீண் 
வெறியொடு  மலைந்திடர்  விளைக்கும்  நெஞ்சமே 
நெறிசிவ  சண்முக  என்று  நீறிடில் 
முறிகொளீஇ  நின்றஉன்  மூடம்  தீருமே. 
7
காயமாம்  கானலைக்  கருதி  நாள்தொறும் 
மாயமாம்  கானிடை  வருந்தும்  நெஞ்சமே 
நேயமாம்  சண்முக  என்று  நீறிடில் 
தோயமாம்  பெரும்பிணித்  துன்பம்  நீங்குமே. 
8
சதிசெயும்  மங்கையர்  தமது  கண்வலை 
மதிகெட  அழுந்தியே  வணங்கும்  நெஞ்சமே 
நிதிசிவ  சண்முக  என்று  நீறிடில் 
வதிதரும்  உலகில்உன்  வருத்தம்  தீருமே. 
9
பசையறு  வஞ்சகர்  பாற்சென்  றேங்கியே 
வசைபெற  நாள்தொறும்  வருந்து  நெஞ்சமே 
இசைசிவ  சண்முக  என்று  நீறிடில் 
திசைபெற  மதிப்பர்உன்  சிறுமை  நீங்குமே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com