
திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி.
உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே.
அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே.
கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்
நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம்
விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே.
அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே.
திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே.



