திருவருட்பா  3. கணேசத் திருஅருள் மாலை

திருவும்  கல்வியும்  சீரும்சி  றப்பும்உன்  திருவ  டிப்புகழ்  பாடுந்தி  றமும்நல் 
உருவும்  சீலமும்  ஊக்கமும்  தாழ்வுறா  உணர்வும்  தந்தென  துள்ளத்த  மர்ந்தவா 
குருவும்தெய்வமும்  ஆகிஅன்  பாளர்தம்  குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே 
வெருவும்  சிந்தைவி  லகக்க  ஜானனம்  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
1
சீத  நாள்மலர்ச்  செல்வனும்  மாமலர்ச்  செல்வி  மார்பகச்  செல்வனும்  காண்கிலாப் 
பாதம்  நாடொறும்  பற்றறப்  பற்றுவோர்  பாதம்  நாடப்  பரிந்தருள்  பாலிப்பாய் 
நாதம்  நாடிய  அந்தத்தில்  ஓங்கும்மெய்ஞ்  ஞான  நாடக  நாயக  நான்கெனும் 
வேதம்  நாடிய  மெய்பொரு  ளேஅருள்  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
2
என்னை  வேண்டிஎ  னக்கருள்  செய்தியேல்  இன்னல்  நீங்கும்நல்  இன்பமும்  ஓங்கும்நின் 
தன்னை  வேண்டிச்ச  ரண்புகுந்  தேன்என்னைத்  தாங்கிக்  கொள்ளும்சரன்பிறி  தில்லைகாண் 
அன்னைவேண்டிஅ  ழும்மகப்  போல்கின்றேன்  அறிகி  லேன்நின்தி  ருவுளம்  ஐயனே 
மின்னை  வேண்டிய  செஞ்சடையாளனே  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
3
நீண்ட  மால்அர  வாகிக்கி  டந்துநின்  நேயத்  தால்கலி  நீங்கிய  வாறுகேட் 
டாண்ட  வாநின்அ  டைக்கலம்  ஆயினேன்  அடியனேன்பிழை  ஆயிர  மும்பொறுத் 
தீண்ட  வாவின்ப  டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு  தியாவரும் 
வேண்டு  வாழ்வுத  ரும்பெருந்  தெய்வமே  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
4
தஞ்சம்  என்றுனைச்  சார்ந்தனன்  எந்தைநீ  தானும்  இந்தச்ச  கத்தவர்  போலவே 
வஞ்சம்  எண்ணி  இருந்திடில்  என்  செய்வேன்  வஞ்சம்  அற்றம  னத்துறை  அண்ணலே 
பஞ்ச  பாதகம்  தீர்த்தனை  என்றுநின்  பாத  பங்கயம்  பற்றினன்  பாவியேன் 
விஞ்ச  நல்லருள்  வேண்டித்த  ருதியோ  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
5
கள்ள  நெஞ்சகன்  ஆயினும்  ஐயநான்  கள்ளம்  இன்றிக்க  ழறுகின்  றேன்என 
துள்ளம்  நின்திரு  வுள்ளம்அ  றியுமே  ஓது  கின்றதென்  போதுக  ழித்திடேல் 
வள்ள  மாமலர்ப்  பாதப்பெ  ரும்புகழ்  வாழ்த்தி  நாத்தழும்  பேறவ  ழங்குவாய் 
வெள்ள  வேணிப்பெ  ருந்தகை  யேஅருள்  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
6
மண்ணில்  ஆசைம  யக்கற  வேண்டிய  மாத  வர்க்கும்ம  திப்பரி  யாய்உனை 
எண்ணி  லாச்சிறி  யேனையும்  முன்நின்றே  ஏன்று  கொண்டனை  இன்றுவி  டுத்தியோ 
உண்ணி  லாவிய  நின்திரு  வுள்ளமும்  உவகை  யோடுவர்ப்  பும்கொள  ஒண்ணுமோ 
வெண்ணி  லாமுடிப்  புண்ணியமூர்த்தியே  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
7
ஆணி  லேஅன்றி  ஆருயிர்ப்  பெண்ணிலே  அலியி  லேஇவ்வ  டியனைப்  போலவே 
காணி  லேன்ஒரு  பாவியை  இப்பெருங்  கள்ள  நெஞ்சக்க  டையனை  மாயையாம் 
ஏணி  லேஇடர்  எய்தவி  டுத்தியேல்  என்செய்  கேன்இனி  இவ்வுல  கத்திலே 
வீணி  லே  உழைப்  பேன்அருள்  ஐயனே  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
8
வாளி  லேவிழி  மங்கையர்  கொங்கையாம்  மலையி  லேமுக  மாயத்தி  லேஅவர் 
தோளி  லே  இடைச்  சூழலி  லேஉந்திச்  சுழியி  லேநிதம்  சுற்றும்என்  நெஞ்சம்நின் 
தாளி  லேநின்த  னித்தபு  கழிலே  தங்கும்  வண்ணம்  தரஉளம்  செய்தியோ 
வேளி  லேஅழ  கானசெவ்  வேளின்முன்  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
9
நாவி  னால்உனை  நாள்தொறும்  பாடுவார்  நாடு  வார்  தமை  நண்ணிப்பு  கழவும் 
ஓவி  லாதுனைப்  பாடவும்  துன்பெலாம்  ஓடவும்மகிழ்  ஓங்கவும்  செய்குவாய் 
காவி  நேர்களத்  தான்மகிழ்  ஐங்கரக்  கடவுளேநற்க  ருங்குழி  என்னும்ஊர் 
மேவி  அன்பர்க்க  ருள்கண  நாதனே  விளங்கும்  சித்தி  விநாயக  வள்ளலே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com