
மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
விரைமலர்த் துணைதமை விரும்பாப்
பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
அளித்திடும் தெள்ளிய அமுதே
தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
தணிகைவாழ் சரவண பவனே.
நன்மைய எல்லாம் அளித்திடும் உனது
நளினமா மலர்அடி வழுத்தாப்
புன்மையர் இடத்திவ் வடியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
சின்மயப் பொருள்நின் தொண்டர்பால் நாயேன்
சேர்ந்திடத் திருவருள் புரியாய்
தன்மயக் கற்றோர்க் கருள்தரும் பொருளே
தணிகைவாழ் சரவண பவனே.
மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை
மனமுற நினைந்தகத் தன்பாம்
பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அருள்எலாம் திரண்ட ஆனந்த உருவே
அன்பர்பால் இருந்திட அருளாய்
தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ்
தணிகைவாழ் சரவண பவனே.
நிலைஅருள் நினது மலர்அடிக் கன்பு
நிகழ்ந்திட நாள்தொறும் நினையாப்
புலையர்தம் இடம்இப் புன்மையேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
மலைஅர சளித்த மரகதக் கொம்பர்
வருந்திஈன் றெடுத்தமா மணியே
தலைஅர சளிக்க இந்திரன் புகழும்
தணிகைவாழ் சரவண பவனே.
வல்இருள் பவம்தீர் மருந்தெனும் நினது
மலர்அடி மனம்உற வழுத்தாப்
புல்லர்தம் இடம்இப் பொய்யனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஒல்லையின் எனைமீட் டுன்அடி யவர்பால்
உற்றுவாழ்ந் திடச்செயின் உய்வேன்
சல்லமற் றவர்கட் கருள்தரும் பொருளே
தணிகைவாழ் சரவண பவனே.
கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்நின்
கருணைஅம் கழல்அடிக் கன்பாம்
பொற்பிலா தவர்பால் ஏழையேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அற்பிலேன் எனினும் என்பிழை பொறுத்துன்
அடியர்பால் சேர்த்திடில் உய்வேன்
தற்பரா பரமே சற்குண மலையே
தணிகைவாழ் சரவண பவனே.
பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
பரஞ்சுடர் நின்அடி பணியும்
புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
நித்திய அடியர் தம்முடன் கூட்ட
நினைந்திடில் உய்குவன் அரசே
சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
தணிகைவாழ் சரவண பவனே.
நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
நின்அடிக் கமலங்கள் நினைந்தே
போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
ஆச்செயில் உய்குவன் அமுதே
சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
தணிகைவாழ் சரவண பவனே.
பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது
பாததா மரைகளுக் கன்பு
புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன்
திருவுளம் அறிகிலன் தேனே
சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள்
தணிகைவாழ் சரவண பவனே.
எண்உறும் அவர்கட் கருளும்நின் அடியை
ஏத்திடா தழிதரும் செல்வப்
புண்உறும் அவர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
கண்உறு மணியாம் நின்அடி யவர்பால்
கலந்திடில் உய்குவன் கரும்பே
தண்உறும் கருணைத் தனிப்பெருங் கடலே.
தணிகைவாழ் சரவண பவனே.



