திருவருட்பா · 12ஆளுடைய அடிகள் அருண்மாலை

தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
1
கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்தனி
உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.
2
மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்‘ரும் ஏமாக்க
அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.
3
உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
இருஎன்ற தனிஅகவல் எண்ணம்எனக் கியம்புதியே.
4
தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.
5
சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
6
வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
7
வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.
8
பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே .
9
வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com