திருவருட்பா  1. அன்பு மாலை

அற்புதப்பொன்  அம்பலத்தே  ஆகின்ற  அரசே 
ஆரமுதே  அடியேன்றன்  அன்பேஎன்  அறிவே 
கற்புதவு  பெருங்கருணைக்  கடலேஎன்  கண்ணே 
கண்ணுதலே  ஆனந்தக்  களிப்பேமெய்க்  கதியே 
வெற்புதவு  பசுங்கொடியை  மருவுபெருந்  தருவே 
வேதஆ  கமமுடியின்  விளங்கும்ஒளி  விளக்கே 
பொற்புறவே  இவ்வுலகில்  பொருந்துசித்தன்  ஆனேன் 
பொருத்தமும்  நின்திருவருளின்  பொருத்தமது  தானே. 
1
நிறைஅணிந்த  சிவகாமி  நேயநிறை  ஒளியே 
நித்தபரி  பூரணமாம்  சுத்தசிவ  வெளியே 
கறைஅணிந்த  களத்தரசே  கண்ணுடைய  கரும்பே 
கற்கண்டே  கனியேஎன்  கண்ணேகண்  மணியே 
பிறைஅணிந்த  முடிமலையே  பெருங்கருணைக்  கடலே 
பெரியவரெல்  லாம்வணங்கும்  பெரியபரம்  பொருளே 
குறைஅணிந்து  திரிகின்றேன்  குறைகளெலாந்  தவிர்த்தே 
குற்றமெலாங்  குணமாகக்  கொள்வதுநின்  குணமே. 
2
ஆண்பனைபெண்  பனையாக்கி  அங்கமதங்  கனையாய் 
ஆக்கிஅருண்  மணத்தில்ஒளி  அனைவரையும்  ஆக்கும் 
மாண்பனைமிக  குவந்தளித்த  மாகருணை  மலையே 
வருத்தமெலாந்  தவிர்த்தெனக்கு  வாழ்வளித்  வாழ்வே 
நாண்பனையுந்  தந்தையும்என்  நற்குருவும்  ஆகி 
நாயடியேன்  உள்ளகத்து  நண்ணியநா  யகனே 
வீண்பனைபோன்  மிகநீண்டு  விழற்கிறைப்பேன்  எனினும் 
விருப்பமெலாம்  நின்அருளின்  விருப்பம்அன்றி  இலையே. 
3
சித்தமனே  கம்புரிந்து  திரிந்துழலுஞ்  சிறியேன் 
செய்வகைஒன்  றறியாது  திகைக்கின்றேன்  அந்தோ 
உத்தமனே  உன்னையலால்  ஒருதுணைமற்  றறியேன் 
உன்னாணை  உன்னாணை  உண்மைஇது  கண்டாய் 
இத்தமனே  யச்சலனம்  இனிப்பொறுக்க  மாட்டேன் 
இரங்கிஅருள்  செயல்வேண்டும்  இதுதருணம்  எந்தாய் 
சுத்தமனே  யத்தவர்க்கும்  எனைப்போலு  மவர்க்கும் 
துயர்தவிப்பான்  மணிமன்றில்  துலங்குநடத்  தரசே. 
4
துப்பாடு  திருமேனிச்  சோதிமணிச்  சுடரே 
துரியவெளிக்  குள்ளிருந்த  சுத்தசிவ  வெளியே 
அப்பாடு  சடைமுடிஎம்  ஆனந்த  மலையே 
அருட்கடலே  குருவேஎன்  ஆண்டவனே  அரசே 
இப்பாடு  படஎனக்கு  முடியாது  துரையே 
இரங்கிஅருள்  செயல்வேண்டும்  இதுதருணங்  கண்டாய் 
தப்பாடு  வேன்எனினும்  என்னைவிடத்  துணியேல் 
தனிமன்றுள்  நடம்புரியுந்  தாண்மலர்எந்  தாயே. 
5
கண்ணோங்கு  நுதற்கரும்பே  கரும்பினிறை  அமுதே 
கற்கண்டே  சர்க்கரையே  கதலிநறுங்  கனியே 
விண்ணோங்கு  வியன்சுடரே  வியன்சுடர்க்குட்  சுடரே 
விடையவனே  சடையவனே  வேதமுடிப்  பொருளே 
பெண்ணோங்கும்  ஒருபாகம்  பிறங்குபெருந்  தகையே 
பெருமானை  ஒருகரங்கொள்  பெரியபெரு  மானே 
எண்ணோங்கு  சிறியவனேன்  என்னினும்நின்  னடியேன் 
என்னைவிடத்  துணியேல்நின்  இன்னருள்தந்  தருளே. 
6
திருநெறிசேர்  மெய்அடியர்  திறன்ஒன்றும்  அறியேன் 
செறிவறியேன்  அறிவறியேன்  செய்வகையை  அறியேன் 
கருநெறிசேர்ந்  துழல்கின்ற  கடையரினுங்  கடையேன் 
கற்கின்றேன்  சாகாத  கல்விநிலை  காணேன் 
பெருநெறிசேர்  மெய்ஞ்ஞான  சித்திநிலை  பெறுவான் 
பிதற்றுகின்றேன்  அதற்குரிய  பெற்றியிலேன்  அந்தோ 
வருநெறியில்  என்னைவலிந்  தாட்கொண்ட  மணியே 
மன்றுடைய  பெருவாழ்வே  வழங்குகநின்  அருளே. 
7
குன்றாத  குணக்குன்றே  கோவாத  மணியே 
குருவேஎன்  குடிமுழுதாட்  கொண்டசிவக்  கொழுந்தே 
என்றாதை  யாகிஎனக்  கன்னையுமாய்  நின்றே 
எழுமையும்என்  றனை  ஆண்ட  என்உயிரின்  துணையே 
பொன்றாத  பொருளேமெய்ப்  புண்ணியத்தின்  பயனே 
பொய்யடியேன்  பிழைகளெலாம்  பொறுத்தபெருந்  தகையே 
அன்றால  நிழல்அமர்ந்த  அருள்இறையே  எளியேன் 
ஆசையெலாம்  நின்னடிமேல்  அன்றிஒன்றும்  இலையே. 
8
பூணாத  பூண்களெலாம்  பூண்டபரம்  பொருளே 
பொய்யடியேன்  பிழைமுழுதும்  பொறுத்தருளி  என்றும் 
காணாத  காட்சியெலாங்  காட்டிஎனக்  குள்ளே 
கருணைநடம்  புரிகின்ற  கருணையைஎன்  புகல்வேன் 
மாணாத  குணக்கொடியேன்  இதைநினைக்குந்  தோறும் 
மனமுருகி  இருகண்ர்  வடிக்கின்றேன்  கண்டாய் 
ஏணாதன்  என்னினும்யான்  அம்மையின்நின்  அடியேன் 
எனஅறிந்தேன்  அறிந்தபின்னர்  இதயமலர்ந்  தேனே. 
9
அந்தோஈ  ததிசயம்ஈ  ததிசயம்என்  புகல்வேன் 
அறிவறியாச்  சிறியேனை  அறிவறியச்  செய்தே 
இந்தோங்கு  சடைமணிநின்  அடிமுடியுங்  காட்டி 
இதுகாட்டி  அதுகாட்டி  என்நிலையுங்  காட்டிச் 
சந்தோட  சித்தர்கள்தந்  தனிச்சூதுங்  காட்டி 
சாகாத  நிலைகாட்டிச்  சகசநிலை  காட்டி 
வந்தோடு  நிகர்மனம்போய்க்  கரைந்த  இடங்  காட்டி 
மகிழ்வித்தாய்  நின்அருளின்  வண்மைஎவர்க்  குளதே. 
10
அன்பர்உளக்  கோயிலிலே  அமர்ந்தருளும்  பதியே 
அம்பலத்தில்  ஆடுகின்ற  ஆனந்த  நிதியே 
வன்பர்உளத்  தேமறைந்து  வழங்கும்ஒளி  மணியே 
மறைமுடிஆ  கமமுடியின்  வயங்குநிறை  மதியே 
என்பருவங்  குறியாமல்  என்னைவலிந்  தாட்கொண் 
டின்பநிலை  தனைஅளித்த  என்னறிவுக்  கறிவே 
முன்பருவம்  பின்பருவங்  கண்டருளிச்  செய்யும் 
முறைமைநின  தருள்நெறிக்கு  மொழிதல்அறிந்  திலனே. 
11
பால்காட்டும்  ஒளிவண்ணப்  படிகமணி  மலையே 
பத்திக்கு  நிலைதனிலே  தித்திக்கும்  பழமே 
சேல்காட்டும்  விழிக்கடையால்  திருவருளைக்  காட்டும் 
சிவகாம  வல்லிமகிழ்  திருநடநா  யகனே 
மால்காட்டி  மறையாதென்  மதிக்குமதி  யாகி 
வழிகாட்டி  வழங்குகின்ற  வகையதனைக்  காட்டிக் 
கால்காட்டிக்  காலாலே  காண்பதுவும்  எனக்கே 
காட்டியநின்  கருணைக்குக்  கைம்மாறொன்  றிலனே. 
12
என்னைஒன்றும்  அறியாத  இளம்பவருவந்  தனிலே 
என்உளத்தே  அமர்ந்தருளி  யான்மயங்குந்  தோறும் 
அன்னைஎனப்  பரிந்தருளி  அப்போதைக்  கப்போ 
தப்பன்எனத்  தெளிவித்தே  அறிவுறுத்தி  நின்றாய் 
நின்னைஎனக்  கென்என்பேன்  என்உயிர்  என்பேனோ 
நீடியஎன்  உயிர்த்துணையாம்  நேயமதென்  பேனோ 
இன்னல்அறுத்  தருள்கின்ற  என்குருவென்  பேனோ 
என்என்பேன்  என்னுடைய  இன்பமதென்  பேனே. 
13
பாடும்வகை  அணுத்துணையும்  பரிந்தறியாச்  சிறிய 
பருவத்தே  அணிந்தணிந்தது  பாடும்வகை  புரிந்து 
நாடும்வகை  உடையோர்கள்  நன்குமதித்  திடவே 
நல்லறிவு  சிறிதளித்துப்  புல்லறிவு  போக்கி 
நீடும்வகை  சன்மார்க்க  சுத்தசிவ  நெறியில் 
நிறுத்தினைஇச்  சிறியேனை  நின்அருள்என்  என்பேன் 
கூடும்வகை  உடையரெலாங்  குறிப்பெதிர்பார்க்  கின்றார் 
குற்றமெலாங்  குணமாகக்  கொண்டகுணக்  குன்றே. 
14
சற்றும்அறி  வில்லாத  எனையும்வலிந்  தாண்டு 
தமியேன்செய்  குற்றமெலாஞ்  சம்மதமாக்  கொண்டு 
கற்றுமறிந்  துங்கேட்டுந்  தெளிந்தபெரி  யவருங் 
கண்டுமகி  ழப்புரிந்து  பண்டைவினை  அகற்றி 
மற்றும்அறி  வனவெல்லாம்  அறிவித்தென்  உளத்தே 
மன்னுகின்ற  மெய்இன்ப  வாழ்க்கைமுதற்  பொருளே 
பெற்றுமறி  வில்லாத  பேதைஎன்மேல்  உனக்குப் 
பெருங்கருணை  வந்தவகை  எந்தவகை  பேசே. 
15
சுற்றதுமற்  றவ்வழியா  சூததுஎன்  றெண்ணாத் 
தொண்டரெலாங்  கற்கின்றார்  பண்டுமின்றுங்  காணார் 
எற்றதும்பு  மணிமன்றில்  இன்பநடம்  புரியும் 
என்னுடைய  துரையேநான்  நின்னுடைய  அருளால் 
கற்றதுநின்  னிடத்தேபின்  கேட்டதுநின்  னிடத்தே 
கண்டதுநின்  னிடத்தேஉட்  கொண்டதுநின்  னிடத்தே 
பெற்றதுநின்  னிடத்தேஇன்  புற்றதுநின்  னிடத்தே 
பெரியதவம்  புரிந்தேன்என்  பெற்றிஅதி  சயமே. 
16
ஏறியநான்  ஒருநிலையில்  ஏறஅறி  யாதே 
இளைக்கின்ற  காலத்தென்  இளைப்பெல்லாம்  ஒழிய 
வீறியஓர்  பருவசத்தி  கைகொடுத்துத்  தூக்கி 
மேலேற்றச்  செய்தவளை  மேவுறவுஞ்  செய்து 
தேறியநீர்  போல்எனது  சித்தமிகத்  தேறித் 
தெளிந்திடவுஞ்  செய்தனைஇச்  செய்கைஎவர்  செய்வார் 
ஊறியமெய்  அன்புடையார்  உள்ளம்எனும்  பொதுவில் 
உவந்துநடம்  புரிகின்ற  ஒருபெரிய  பொருளே. 
17
தருநிதியக்  குருவியற்றச்  சஞ்சலிக்கு  மனத்தால் 
தளர்ந்தசிறி  யேன்தனது  தளர்வெல்லாந்  தவிர்த்து 
இருநிதியத்  திருமகளிர்  இருவர்எனை  வணங்கி 
இசைந்திடுவந்  தனம்அப்பா  என்றுமகிழ்ந்  திசைத்துப் 
பெருநிதிவாய்த்  திடஎனது  முன்பாடி  ஆடும் 
பெற்றிஅறித்  தனைஇந்தப்  பேதமையேன்  தனக்கே 
ஒருநிதிநின்  அருள்நிதியும்  உவந்தளித்தல்  வேண்டும் 
உயர்பொதுவில்  இனபநடம்  உடையபரம்  பொருளே. 
18
அஞ்சாதே  என்மகனே  அனுக்கிரகம்  புரிந்தாம் 
ஆடுகநீ  வேண்டியவா  றாடுகஇவ்  வுலகில் 
செஞ்சொலி  வயலோங்கு  தில்லைமன்றில்  ஆடுந் 
திருநடங்கண்  டன்புருவாய்ச்  சித்தசுத்த  னாகி 
எஞ்சாத  நெடுங்காலம்  இன்பவெள்ளந்  திளைத்தே 
இனிதுமிக  வாழியவென்  றெனக்கருளிச்  செய்தாய் 
துஞ்சாதி  யந்தமிலாச்  சுத்தநடத்  தரசே 
துரியநடு  வேஇருந்த  சுயஞ்சோதி  மணியே. 
19
நான்கேட்கின்  றவையெல்லாம்  அளிக்கின்றாய்  எனக்கு 
நல்லவனே  எல்லாமும்  வல்லசிவ  சித்தா 
தான்கேட்கின்  றவையின்றி  முழுதொருங்கே  உணர்ந்தாய் 
தத்துவனே  மதிஅணிந்த  சடைமுடிஎம்  இறைவா 
தேன்கேட்கும்  மொழிமங்கை  ஒருபங்கில்  உடையாய் 
சிவனேஎம்  பெருமானே  தேவர்பெரு  மானே 
வான்கேட்கும்  புகழ்த்தில்லை  மன்றில்நடம்  புரிவாய் 
மணிமிடற்றுப்  பெருங்கருணை  வள்ளல்என்கண்  மணியே. 
20
ஆனந்த  வெளியினிடை  ஆனந்த  வடிவாய் 
ஆனந்த  நடம்புரியும்  ஆனந்த  அமுதே 
வானந்த  முதல்எல்லா  அந்தமுங்கண்  டறிந்தோர் 
மதிக்கின்ற  பொருளேவெண்  மதிமுடிச்செங்  கனியே 
ஊனந்தங்  கியமாயை  உடலினிடத்  திருந்தும் 
ஊனமிலா  திருக்கின்ற  உளவருளிச்  செய்தாய் 
நானந்த  உளவுகண்டு  நடத்துகின்ற  வகையும் 
நல்லவனே  நீமகிழ்ந்து  சொல்லவரு  வாயே. 
21
ஆரணமும்  ஆகமமும்  எதுதுணிந்த  ததுவே 
அம்பலத்தில்  ஆடுகின்ற  ஆட்டமென  எனக்குக் 
காரணமுங்  காரியமும்  புலப்படவே  தெரித்தாய் 
கண்ணுதலே  இங்கிதற்குக்  கைம்மாறொன்  றறியேன் 
பூரணநின்  அடித்தொண்டு  புரிகின்ற  சிறியேன் 
போற்றிசிவ  போற்றிஎனப்  போற்றிமகிழ்  கின்றேன் 
நாரணநான்  முகன்முதலோர்  காண்பரும்அந்  நடத்தை 
நாயடியேன்  இதயத்தில்  நவிற்றியருள்  வாயே. 
22
இறைவநின  தருளாலே  எனைக்கண்டு  கொண்டேன் 
எனக்குள்உனைக்  கண்டேன்பின்  இருவரும்ஒன்  றாக 
உறைவதுகண்  டதிசயித்தேன்  அதிசயத்தை  ஒழிக்கும் 
உளவறியேன்  அவ்வுளவொன்  றுரைத்தருளல்  வேண்டும் 
மறைவதிலா  மணிமன்றுள்  நடம்புரியும்  வாழ்வே 
வாழ்முதலே  பரமசுக  வாரிஎன்கண்  மணியே 
குறைவதிலாக்  குளிர்மதியே  சிவகாமவல்லிக் 
கொழுந்துபடர்ந்  தோங்குகின்ற  குணநிமலக்  குன்றே. 
23
சத்தியமெய்  அறிவின்ப  வடிவாகிப்  பொதுவில் 
தனிநடஞ்செய்  தருளுகின்ற  சற்குருவே  எனக்குப் 
புத்தியொடு  சித்தியும்நல்  லறிவும்அளித்  தழியாப் 
புனிதநிலை  தனிலிருக்கப்  புரிந்தபரம்  பொருளே 
பத்திஅறி  யாச்சிறியேன்  மயக்கம்இன்னுந்  தவிர்த்துப் 
பரமசுக  மயமாக்கிப்  படிற்றுளத்தைப்  போக்கித் 
தத்துவநீ  நான்என்னும்  போதமது  நீக்கித் 
தனித்தசுகா  தீதமும்நீ  தந்தருள்க  மகிழ்ந்தே. 
24
ஏதும்அறி  யாதிருளில்  இருந்தசிற  யேனை 
எடுத்துவிடுத்  தறிவுசிறி  தேய்ந்திடவும்  புரிந்து 
ஓதுமறை  முதற்கலைகள்  ஓதாமல்  உணர 
உணர்விலிருந்  துணர்த்திஅருள்  உண்மைநிலை  காட்டித் 
தீதுசெறி  சமயநெறி  செல்லுதலைத்  தவிர்த்துத் 
திருஅருண்மெய்ப்  பொதுநெறியில்  செலுத்தியும்  நான்மருளும் 
போதுமயங்  கேல்மகனே  என்றுமயக்  கெல்லாம் 
போக்கிஎனக்  குள்ளிருந்த  புனிதபரம்  பொருளே. 
25
முன்னறியேன்  பின்னறியேன்  முடிபதொன்று  மறியேன் 
முன்னியுமுன்  னாதும்இங்கே  மொழிந்தமொழி  முழுதும் 
பன்னிலையில்  செறிகின்றோர்  பலரும்மனம்  உவப்பப் 
பழுதுபடா  வண்ணம்அருள்  பரிந்தளித்த  பதியே 
தன்னிலையில்  குறைவுபடாத்  தத்துவப்பேர்  ஒளியே 
தனிமன்றுள்  நடம்புரியஞ்  சத்தியதற்  பரமே 
இந்நிலையில்  இன்னும்என்றன்  மயக்கமெலாந்  தவிர்த்தே 
எனைஅடிமை  கொளல்வேண்டும்  இதுசமயங்  காணே. 
26
ஐயவிற்  சிறிதும்அறிந்  தனுபவிக்கக்  தெரியா 
தழுதுகளித்  தாடுகின்ற  அப்பருவத்  தெளியேன் 
மெய்யறிவிற்  சிறந்தவருங்  களிக்கஉனைப்  பாடி 
விரும்பிஅருள்  நெறிநடகக  விடுத்தனைநீ  யன்றோ 
பொய்யறிவிற்  புலைமனத்துக்  கொடியேன்முன்  பிறப்பில் 
புரிந்தவம்  யாததனைப்  புகன்றருள  வேண்டும் 
துய்யறிவுக்  கறிவாகி  மணிமன்றில்  நடஞ்செய் 
சுத்தபரி  பூரணமாஞ்  சுகரூபப்  பொருளே. 
27
அருள்நிறைந்த  பெருந்தகையே  ஆனந்த  அமுதே 
அற்புதப்பொன்  அம்பலத்தே  ஆடுகின்ற  அரசே 
தெருள்நிறைந்த  சிந்தையிலே  தித்திக்குந்  தேனே 
செங்கனியே  மதிஅணிந்த  செஞ்சடைஎம்  பெருமான் 
மருள்நிறைந்த  மனக்கொடியேன்  வஞ்சமெலாங்  கண்டு 
மகிழ்ந்தினிய  வாழ்வளித்த  மாகருணைக்  கடலே 
இருள்நிறைந்த  மயக்கம்இன்னுந்  தீர்த்தருளல்  வேண்டும் 
என்னுடைய  நாயகனே  இதுதருணங்  காணே. 
28
மன்னியபொன்  னம்பலத்தே  ஆனந்த  நடஞ்செய் 
மாமணியே  என்னிருகண்  வயங்கும்ஒளி  மணியே 
தன்னியல்பின்  நிறைந்தருளுஞ்  சத்துவபூ  ரணமே 
தற்பரமே  சிற்பரமே  தத்துவப்பே  ரொளியே 
அன்னியமில்  லாதசுத்த  அத்துவித  நிலையே 
ஆதியந்த  மேதுமின்றி  அமர்ந்தபரம்  பொருளே 
என்னியல்பின்  எனக்கருளி  மயக்கம்இன்னுந்  தவிர்த்தே 
எனைஆண்டு  கொளல்வேண்டும்  இதுதருணங்  காணே. 
29
பூதநிலை  முதற்பரமே  நாதநிலை  அளவும் 
போந்தவற்றின்  இயற்கைமுதற்  புணர்ப்பெல்லாம்  விளங்க 
வேதநிலை  ஆகமத்தின்  நிலைகளெலாம்  விளங்க 
வினையேன்றன்  உளத்திருந்து  விளக்கியமெய்  விளக்கே 
போதநிலை  யாய்அதுவுங்  கடந்தஇன்ப  நிலையாய்ப் 
பொதுவினின்மெய்  அறிவின்ப  நடம்புரியும்  பொருளே 
ஏதநிலை  யாவகைஎன்  மயக்கம்இன்னுந்  தவிர்த்தே 
எனைக்காத்தல்  வேண்டுகின்றேன்  இதுதருணங்  காணே. 
30
செவ்வண்ணத்  திருமேனி  கொண்டொருபாற்  பசந்து 
திகழ்படிக  வண்ணமொடு  தித்திக்குங்  கனியே 
இவ்வண்ணம்  எனமறைக்கும்  எட்டாமெய்ப்  பொருளே 
என்னுயிரே  என்னுயிர்க்குள்  இருந்தருளும்  பதியே 
அவ்வண்ணப்  பெருந்தகையே  அம்பலத்தே  நடஞ்செய் 
ஆரமுதே  அடியேனிங்  ககமகிழ்ந்து  புரிதல் 
எவ்வண்ணம்  அதுவண்ணம்  இசைத்தருளல்  வேண்டும் 
என்னுடைய  நாயகனே  இதுதருணங்  காணே. 
31

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com