திருவருட்பா  89. பொதுத் தனித் திருவெண்பா

வந்திக்கும்  மெய்யடியார்  மாலற்ற  ஓர்மனத்தில் 
சந்திக்கும்  எங்கள்  சயம்புவே  -  பந்திக்கும் 
வன்மலக்கட்  டெல்லாம்  வலிகெட்  டறநினது 
நின்மலக்கண்  தண்ணருள்தான்  நேர். 
1
சங்கரா  முக்கட்  சயம்புவே  தாழ்சடைமேல் 
பொங்கராத்  திங்கள்  பொலிந்தோனே  -  வெங்கரா 
வாய்நின்று  பிள்ளை  வரப்பாடும்  வன்தொண்டர்க் 
காய்நின்று  சந்துரைத்த  தார். 
2
நீலக்  களங்கொண்ட  நீடொளியே  நீள்கங்கை 
கோலச்  சடைக்கணிந்த  கோமளமே  -  ஞாலத்தில் 
அந்தோ  சிறியேன்  அருளின்றி  வாடுவது 
சந்தோட  மோநின்  றனக்கு. 
3
நான்சிறியேன்  என்னினும்இந்  நானிலத்தில்  நான்செய்பிழை 
தான்சிறிதோ  அன்றுலகில்  தான்பெரிதே  -  மான்கரத்தோய் 
அங்ஙனமே  னும்உன்  அருட்பெருமைக்  கிப்பெருமை 
எங்ஙனம்என்  றுள்ளம்  எழும். 
4
ஆவித்  துணையேஎன்  ஆரமுதே  நின்வடிவைப் 
பாவித்துள்  நையேன்இப்  பாவியேன்  -  சேவித்து 
வாழ்த்தேன்நின்  பொன்னடியில்  வந்தென்  தலைகுனித்துத் 
தாழ்த்தேன்என்  செய்தேன்  தவம். 
5
உன்னைநினைந்  திங்கே  உலாவுகின்றேன்  அன்றிஎந்தாய் 
பின்னை  நினைப்பொன்றும்  பெற்றிலேன்  -  என்னை 
விடாதேநின்  பொன்னடியை  மேவார்சேர்  துன்பம் 
கொடாதே  எனைஏன்று  கொள். 
6
என்னரசே  நின்னடிக்கீழ்  என்னிடரை  நீக்கெனநான் 
சொன்னதலால்  தாயுடனும்  சொன்னேனோ  -  இன்னுமிந்தத் 
துன்பச்  சுமையைச்  சுமக்கமுடி  யாதென்னால் 
அன்பர்க்  கருள்வோய்  அருள். 
7
அன்னேஎன்  அப்பாஎன்  ஆருயிர்க்கோர்  ஆதரவே 
என்னேநின்  உள்ளம்  இரங்கிலையே  -  பொன்னே 
உடையா  ரிடைஎன்  உளநொந்து  வாடிக் 
கடையேன்  படுந்துயரைக்  கண்டு. 
8
பகுதி  தகுதி  விகுதிஎனும்  பாட்டில் 
இகலில்  இடையை  இரட்டித்  -  தகவின் 
அருச்சித்தால்  முன்னாம்  அதுகடையாம்  கண்டீர் 
திருச்சிற்  சபையானைத்  தேர்ந்து. 
9
தாதாதா  தாதாதா  தாக்குறைக்கென்  செய்குதும்யாம் 
தாதாதா  என்றுலகில்  தான்அலைந்தோம்  -  போதாதா 
நந்தா  மணியே  நமச்சிவா  யப்பொருளே 
எந்தாய்  எனப்புகழ  வே. 
10
பொய்கண்டாய்  காமப்  புதுமயக்கிற்  போய்உழலக் 
கைகண்டாய்  என்னபலன்  கண்டாயே  -  மெய்கண்ட 
பொன்னே  அனையார்பால்  போய்வணங்கக்  கற்றிலையோ 
என்னேநின்  தன்மைமன  மே. 
11
இவ்வழியில்  செல்லாதே  என்னுடையான்  தன்னடிசேர் 
அவ்வழியில்  செல்என்  றடிக்கடிக்குச்  -  செவ்வழியில் 
சொன்னாலும்  கேட்கிலைநீ  துட்டமன  மேஉனக்கிங் 
கென்னால்  உறவே  தினி. 
12
கால்வாங்  கியஉட்  கதவம்  கொளும்அகத்தின் 
பால்வாங்  கியகால்  பரம்பரனே  -  மால்வாங் 
கரிதாரம்  ஊணாதி  யாம்மயல்கொண்  டேழைப் 
பெரிதார  ஓர்மொழியைப்  பேசு. 
13

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com