
ஒற்றி ஊரனைப்
பற்றி நெஞ்சமே
நிற்றி நீஅருள்
பெற்றி சேரவே.-
சேர நெஞ்சமே
தூரம் அன்றுகாண்
வாரம் வைத்தியேல்
சாரும் முத்தியே.
முத்தி வேண்டுமேல்
பத்தி வேண்டுமால்
சத்தி யம்இது
புத்தி நெஞ்சமே.
நெஞ்ச மேஇது
வஞ்ச மேஅல
பிஞ்ச கன்பதம்
தஞ்சம் என்பதே.
என்ப தேற்றவன்
அன்ப தேற்றுநீ
வன்பு மாற்றுதி
இன்பம் ஊற்றவே.-
ஊற்றம் உற்றுவெண்
நீற்றன் ஒற்றியூர்
போற்ற நீங்குமால்
ஆற்ற நோய்களே.-
நோய்கள் கொண்டிடும்
பேய்கள் பற்பலர்
தூய்தன் ஒற்றியூர்க்
கேய்தல் இல்லையே.
இல்லை இல்லைகாண்
ஒல்லை ஒற்றியூர்
எல்லை சேரவே
அல்லல் என்பதே.-
அல்லல் என்பதேன்
தொல்லை நெஞ்சமே
மல்லல் ஒற்றியூர்
எல்லை சென்றுமே.-
சென்று வாழ்த்துதி
நன்று நெஞ்சமே
என்றும் நல்வளம்
ஒன்றும் ஒற்றியே.-



