திருவருட்பா  69. புறமொழிக் கிரங்கல்

கேளனந்  தான்ஒரு  போதுண்  டனைமனக்  கேதம்அற 
நீளனம்  தேடு  முடியான்  எதுநினக்  கீந்ததென்றே 
வேளனம்  போல்நடை  மின்னாரும்  மைந்தரும்  வேடிக்கையாய் 
ஏளனம்  செய்குவர்  நீஅரு  ளாவிடில்  என்அப்பனே. 
1
அப்பாநின்  பொன்னருள்  என்மேல்  தயைசெய்  தளித்திலையேல் 
துப்பா  னவும்ஒரு  போதுதுவ்  வாது  சுழன்றனையே 
இப்பாரில்  ஈசன்  திருவருள்  நீபெற்ற  தெங்ஙனமோ 
செப்பாய்  எனவரிப்  பார்சிரிப்  பார்இச்  செகத்தவரே. 
2
தீதுசெய்  தேற்கருள்  செய்வான்நின்  சித்தம்  திரும்பிலையேல் 
தாதுசெய்  தேகத்து  ணாஒரு  போது  தவிர்ந்தநினக் 
கேதுசெய்  தான்சிவன்  என்றே  உலகர்  இழிவுரைத்தால் 
யாதுசெய்  வேன்தெய்வ  மேஎளி  யேன்உயிர்க்  கின்னமுதே. 
3
தெரியாமை  யால்சிறி  யேன்செய்குற்  றத்தைநின்  சித்தமதில் 
பிரியாமை  வைத்தருள்  செய்திலை  யேல்எனைப்  பெற்றவளும் 
பெரியாசை  கொண்டபிள்  ளாய்அரன்  என்தரப்  பெற்றதென்றே 
பரியாசை  செய்குவ  ளால்அய  லார்என்  பகருவதே. 
4
எண்ணாமல்  நாயடி  யேன்செய்த  குற்றங்கள்  யாவும்எண்ணி 
அண்ணாநின்  சித்தம்  இரங்காய்  எனில்இங்  கயலவர்தாம் 
பெண்ஆர்  இடத்தவன்  பேரருள்  சற்றும்  பெறாதநினக் 
கொண்ணாதிவ்  வண்மை  விரதம்என்  றால்என்  உரைப்பதுவே. 
5
பொய்யான  வஞ்சக  னேன்பிழை  யாவும்  பொறுத்துனருள் 
செய்யாய்  எனில்எது  செய்குவன்  யான்இச்  செகதலத்தோர் 
எய்யா  விரதத்தில்  யாதுபெற்  றாய்என்  றிகழ்வர்கண்டாய் 
அய்யாஎன்  இன்னமு  தேஅர  சேஎன  தாண்டவனே. 
6
உன்உள்ளம்  கொண்டேற்  கருளாய்  எனில்இவ்  உலகர்பொய்யாம் 
என்உள்ளம்  கொண்ட  களவறி  யாதுநின்  றேடவிங்கே 
நின்உள்ளம்  கொள்விர  தப்பயன்  யாது  நிகழ்த்தெனவே 
முன்உள்ளம்  கொண்டு  மொழிவர்கண்  டாய்எம்  முதலவனே. 
7
முந்தோகை  கொண்டுநின்  தண்ணருள்  வாரியின்  மூழ்குதற்கிங் 
கந்தோஎன்  துன்பம்  துடைத்தரு  ளாய்எனில்  ஆங்குலகர் 
வந்தோ  சிவவிர  தாஎது  பெற்றனை  வாய்திறஎன் 
றிந்தோர்  தருசடை  யாய்விடை  யாய்என்னை  ஏசுவரே. 
8
ஆசும்  படியில்  அகங்கா  ரமும்உடை  யான்என்றெண்ணிப் 
பேசும்  படியில்  எனக்கரு  ளாய்எனில்  பேருலகோர் 
ஏசும்  படிவரும்  பொய்வேடன்  என்றதை  எண்ணிஎண்ணிக் 
கூசும்  படிவரு  மேஎன்செய்  கேன்என்  குலதெய்வமே. 
9
ஐதட்  டிடும்நெஞ்  சகத்தேன்  பிழைகளை  ஆய்ந்துவெறும் 
பொய்தட்  டிகல்உடை  யேற்குன்  கருணை  புரிந்திலையேல் 
வெய்தட்டி  உண்ட  விரதாநின்  நோன்பு  விருத்தம்என்றே 
கைதட்டி  வெண்ணகை  செய்வர்கண்  டாய்அருட்  கற்பகமே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com