திருவருட்பா  30. நெஞ்சுறுத்த திருநேரிசை

பொன்னார்  விடைக்கொடிஎம்  புண்ணியனைப்  புங்கவனை 
ஒன்னார்  புரம்எரித்த  உத்தமனை  -  மன்னாய 
அத்தனைநம்  ஒற்றியூர்  அப்பனைஎல்  லாம்வல்ல 
சித்தனைநீ  வாழ்த்துதிநெஞ்  சே. 
1
நெஞ்சே  உலக  நெறிநின்று  நீமயலால் 
அஞ்சேல்என்  பின்வந்  தருள்கண்டாய்  -  எஞ்சாத் 
தவக்கொழுந்தாம்  சற்குணவர்  தாழ்ந்தேத்தும்  ஒற்றிச் 
சிவக்கொழுந்தை  வாழ்த்துதும்நாம்  சென்று. 
2
சென்றுசென்று  நல்காத  செல்வர்தலை  வாயிலிலே 
நின்று  நின்று  வாடுகின்ற  நெஞ்சமே  -  இன்றுதிரு 
ஒற்றியப்பன்  தாண்மலரை  உன்னுதியேல்  காதலித்து 
மற்றிசைப்ப  தெல்லாம்  வரும். 
3
வருநாள்  உயிர்வாழும்  மாண்பறியோம்  நெஞ்சே 
ஒருநாளும்  நீவேறொன்  றுன்னேல்  -  திருநாளைப் 
போவான்  தொழுமன்றில்  புண்ணியனை  ஒற்றியில்தாய் 
ஆவான்  திருவடிஅல்  லால். 
4
அல்லாலம்  உண்டமிடற்  றாரமுதை  அற்புதத்தைக் 
கல்லால  நீழல்அமர்  கற்பகத்தைச்  -  சொல்ஆர்ந்த 
விண்மணியை  என்உயிரை  மெய்ப்பொருளை  ஒற்றியில்என் 
கண்மணியை  நெஞ்சே  கருது. 
5
கருதாயோ  நெஞ்சே  கதிகிடைக்க  எங்கள் 
மருதா  எழில்தில்லை  மன்னா  -  எருதேறும் 
என்அருமைத்  தெய்வதமே  என்அருமைச்  சற்குருவே 
என்அருமை  அப்பாவே  என்று. 
6
என்றும்உனக்  காளாவேன்  என்நெஞ்சே  வன்நெஞ்சர் 
ஒன்றும்  இடம்  சென்றங்  குழலாதே  -  நன்றுதரும் 
ஒற்றியப்பன்  பொன்அடியை  உன்னுகின்றோர்  தம்பதத்தைப் 
பற்றிநிற்பை  யாகில்  பரிந்து. 
7
பரிந்துனக்குச்  சொல்கின்றேன்  பாவங்கள்  எல்லாம் 
எரிந்துவிழ  நாம்கதியில்  ஏறத்  -  தெரிந்து 
விடையானை  ஒற்றியூர்  வித்தகனை  மாதோர் 
புடையானை  நெஞ்சமே  போற்று. 
8
போற்றுதிஎன்  நெஞ்சே  புரம்நகையால்  சுட்டவனை 
ஏற்றுகந்த  பெம்மானை  எம்மவனை  -  நீற்றொளிசேர் 
அவ்வண்ணத்  தானை  அணிபொழில்சூழ்  ஒற்றியூர்ச் 
செவ்வண்ணத்  தானைத்  தெரிந்து. 
9
தெரிந்து  நினக்கனந்தம்  தெண்டன்இடு  கின்றேன் 
விரிந்தநெஞ்சே  ஒற்றியிடை  மேவும்  -பரிந்தநெற்றிக் 
கண்ணானை  மாலயனும்  காணப்  படாதானை 
எண்ணாரை  எண்ணாதே  என்று. 
10
என்றென்  றழுதாய்  இலையேஎன்  நெஞ்சமே 
ஒன்றென்று  நின்ற  உயர்வுடையான்  -  நன்றென்ற 
செம்மைத்  தொழும்பர்தொழும்  சீர்ஒற்றி  யூர்அண்ணல் 
நம்மைத்  தொழும்புகொள்ளும்  நாள். 
11
நாளாகு  முன்எனது  நன்நெஞ்சே  ஒற்றியப்பன் 
தாளாகும்  தாமரைப்பொன்  தண்மலர்க்கே  -  ஆளாகும் 
தீர்த்தர்  தமக்கடிமை  செய்தவர்தம்  சீர்ச்சமுகம் 
பார்த்துமகிழ்  வாய்அதுவே  பாங்கு. 
12
பாங்குடையார்  மெய்யில்  பலித்ததிரு  நீறணியாத் 
தீங்குடையார்  தீமனையில்  செல்லாதே  -  ஓங்குடையாள் 
உற்றமர்ந்த  பாகத்தெம்  ஒற்றியப்பன்  பொன்அருளைப் 
பெற்றமர்தி  நெஞ்சே  பெரிது. 
13
பெரியானை  மாதர்ப்  பிறைக்கண்ணி  யானை 
அரியானை  அங்கணனை  ஆர்க்கும்  -  கரியானைத் 
தோலானைச்  சீர்ஒற்றிச்  சுண்ணவெண்  நீற்றானை 
மேலானை  நெஞ்சே  விரும்பு. 
14
விரும்பித்  திருமால்  விலங்காய்  நெடுநாள் 
அரும்பித்  தளைந்துள்  அயர்ந்தே  -  திரும்பிவிழி 
நீர்கொண்டும்  காணாத  நித்தன்ஒற்றி  யூரன்அடிச் 
சீர்கொண்டு  நெஞ்சே  திகழ். 
15
திகழ்கின்ற  ஞானச்  செழுஞ்சுடரை  வானோர் 
புகழ்கின்ற  தெய்வத்தைப்  போதம்  -  நிகழ்கின்ற 
ஒற்றிக்  கனியை  உலகுடைய  நாயகத்தை 
வெற்றித்  துணையைநெஞ்சே  வேண்டு. 
16
வேண்டாமை  வேண்டுவது  மேவாத்  தவமுடையோர் 
தீண்டாமை  யாததுநீ  தீண்டாதே  -  ஈண்டாமை 
ஒன்றுவபோல்  நெஞ்சேநீ  ஒன்றிஒற்றி  யூரன்பால் 
சென்றுதொழு  கண்டாய்  தினம். 
17
தினந்தோறும்  உள்ளுருகிச்  சீர்பாடும்  அன்பர் 
மனந்தோறும்  ஓங்கும்  மணியை  -  இனந்தோறும் 
வேதமலர்  கின்ற  வியன்பொழில்சூழ்  ஒற்றிநகர்ப் 
போத  மலரைநெஞ்சே  போற்று. 
18
போற்றார்  புரம்பொடித்த  புண்ணியனை  விண்ணவர்கள் 
ஆற்றாத  நஞ்சமுண்ட  ஆண்தகையைக்  -  கூற்றாவி 
கொள்ளும்  கழற்கால்  குருமணியை  ஒற்றியிடம் 
கொள்ளும்  பொருளைநெஞ்சே  கூறு. 
19
கூறுமையாட்  கீந்தருளும்  கோமானைச்  செஞ்சடையில் 
ஆறுமலர்க்  கொன்றை  அணிவோனைத்  -  தேறுமனம் 
உள்ளவர்கட்  குள்ளபடி  உள்ளவனை  ஒற்றிஅமர் 
நள்ளவனை  நெஞ்சமே  நாடு. 
20
நாடும்  சிவாய  நமஎன்று  நாடுகின்றோர் 
கூடும்  தவநெறியில்  கூடியே  -  நீடும்அன்பர் 
சித்தமனைத்  தீபகமாம்  சிற்பரனை  ஒற்றியூர் 
உத்தமனை  நெஞ்சமே  ஓது. 
21
ஓதுநெறி  ஒன்றுளதென்  உள்ளமே  ஓர்திஅது 
தீதுநெறி  சேராச்  சிவநெறியில்  -  போதுநெறி 
ஓதம்  பிடிக்கும்வயல்  ஒற்றியப்பன்  தொண்டர்திருப் 
பாதம்  பிடிக்கும்  பயன். 
22
பயன்அறியாய்  நெஞ்சே  பவஞ்சார்தி  மாலோ 
டயன்அறியாச்  சீருடைய  அம்மான்  -  நயனறியார் 
உள்ளத்  தடையான்  உயர்ஒற்றி  யூரவன்வாழ் 
உள்ளத்  தவரை  உறும். 
23
தவராயி  னும்தேவர்  தாமாயி  னும்மற் 
றெவரா  யினும்நமக்கிங்  கென்னாம்  -  கவராத 
நிந்தை  அகன்றிடஎன்  நெஞ்சமே  ஒற்றியில்வாழ் 
எந்தை  அடிவணங்கா  ரேல். 
24
ஏலக்  குழலார்  இடைக்கீழ்ப்  படுங்கொடிய 
ஞாலக்  கிடங்கரினை  நம்பாதே  -  நீல 
மணிகண்டா  என்றுவந்து  வாழ்த்திநெஞ்சே  நாளும் 
பணிகண்டாய்  அன்னோன்  பதம். 
25
பதந்தருவான்  செல்வப்  பயன்தருவான்  மன்னும் 
சதந்தருவான்  யாவும்  தருவான்  -  இதம்தரும்என் 
நெஞ்சம்என்கொல்  வாடுகின்றாய்  நின்மலா  நின்அடியே 
தஞ்சமென்றால்  ஒற்றியப்பன்  தான். 
26

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com