திருவருட்பா  18. அறிவரும் பெருமை

நாயினும்  கடையேன்  என்செய்வேன்  பிணியால்  நலிகின்ற  நலிவினை  அறிந்தும் 
தாயினும்  இனியாய்  இன்னும்நீ  வரவு  தாழ்த்தனை  என்கொலென்  றறியேன் 
மாயினும்  அல்லால்  வாழினும்  நினது  மலரடி  அன்றிஒன்  றேத்தேன் 
காயினும்  என்னைக்  கனியினும்  நின்னைக்  கனவினும்  விட்டிடேன்  காணே. 
1
காண்பது  கருதி  மாலொடு  மலர்வாழ்  கடவுளர்  இருவரும்  தங்கள் 
மாண்பது  மாறி  வேறுரு  எடுத்தும்  வள்ளல்நின்  உருஅறிந்  திலரே 
கோண்பதர்  நெஞ்சக்  கொடியனேன்  எந்தக்  கொள்கைகொண்  டறிகுவதையா 
பூண்பது  பணியாய்  பொதுவில்நின்  றாடும்  புனிதநின்  அருளலா  தின்றே. 
2
இன்றுவந்  தெனைநீ  அடிமைகொள்  ளாயேல்  எவ்வுல  கத்தரும்  தூற்ற 
நன்றுநின்  றன்மேல்  பழிவரும்  என்மேல்  பழியிலை  நவின்றனன்  ஐயா 
அன்றுவந்  தொருசேய்க்  கருள்புரிந்  தாண்ட  அண்ணலே  ஒற்றியூர்  அரசே 
நின்றுசிற்  சபைக்குள்  நடம்செயும்  கருணா  நிலயமே  நின்மலச்  சுடரே. 
3
சுடர்கொளும்  மணிப்பூண்  முலைமட  வியர்தம்  தொடக்கினில்  பட்டுழன்  றோயா 
இடர்கொளும்  எனைநீ  ஆட்கொளும்  நாள்தான்  எந்தநாள்  அந்தநாள்  உரையாய் 
படர்கொளும்  வானோர்  அமுதுண  நஞ்சைப்  பரிந்துண்ட  கருணைஅம்  பரமே 
குடர்கொளும்  சூலப்  படைஉடை  யவனே  கோதையோர்  கூறுடையவனே. 
4
உடைமைவைத்  தெனக்கின்  றருள்செயா  விடினும்  ஒப்பிலாய்  நின்னடிக்  கெனையே 
அடைமைவைத்  தேனும்  நின்அருட்  பொருள்இங்  களித்திட  வேண்டும்  இன்றெவைக்கும் 
கடைமையேன்  வேறோர்  தேவரை  அறியேன்  கடவுள்நின்  திருவடி  அறிக 
படைமைசேர்  கரத்தெம்  பசுபதி  நீயே  என்உளம்  பார்த்துநின்  றாயே. 
5
பார்த்துநிற்  கின்றாய்  யாவையும்  எளியேன்  பரதவித்  துறுகணால்  நெஞ்சம் 
வேர்த்துநிற்  கின்றேன்  கண்டிலைகொல்லோ  விடம்உண்டகண்டன்நீஅன்றோ 
ஆர்த்துநிற்  கின்றார்  ஐம்புல  வேடர்  அவர்க்கிலக்  காவனோ  தமியேன் 
ஓர்த்துநிற்  கின்றார்  பரவுநல்  ஒற்றி  யூரில்வாழ்  என்உற  வினனே. 
6
உறவனே  உன்னை  உள்கிநெஞ்  சழலின்  உறும்இழு  தெனக்கசிந்  துருகா 
மறவனேன்  தன்னை  ஆட்கொளா  விடில்யான்  வருந்துவ  தன்றிஎன்  செய்கேன் 
நிறவனே  வெள்ளை  நீறணி  பவனே  நெற்றிமேல்  கண்ணுடை  யவனே 
அறவனே  தில்லை  அம்பலத்  தாடும்  அப்பனே  ஒற்றியூர்க்  கரைசே. 
7
கரைபடா  வஞ்சப்  பவக்கடல்  உழக்கும்  கடையனேன்  நின்திரு  வடிக்கு 
விரைபடா  மலர்போல்  இருந்துழல்கின்றேன்வெற்றனேன்  என்செய  விரைகேன் 
திரைபடாக்  கருணைச்  செல்வவா  ரிதியே  திருவொற்றி  யூர்வளர்  தேனே 
உரைபடாப்  பொன்னே  புரைபடா  மணியே  உண்ணுதற்  கினியநல்  அமுதே. 
8
நல்அமு  தனையார்  நின்திரு  வடிக்கே  நண்புவைத்  துருகுகின்  றனரால் 
புல்அமு  தனையேன்  என்செய்வான்  பிறந்தேன்  புண்ணியம்  என்பதொன்  றறியேன் 
சொல்அமு  தனைய  தோகைஓர்  பாகம்  துன்னிய  தோன்றலே  கனியாக் 
கல்அமு  தாக்கும்  கடன்உனக்  கன்றோ  கடையனேன்  கழறுவ  தென்னே. 
9
என்னைநின்  னவனாக்  கொண்டுநின்  கருணை  என்னும்நன்  னீரினால்  ஆட்டி 
அன்னைஅப்  பனுமாய்ப்  பரிவுகொண்  டாண்ட  அண்ணலே  நண்ணரும்  பொருளே 
உன்னருந்  தெய்வ  நாயக  மணியே  ஒற்றியூர்  மேவும்என்  உறவே 
நன்னர்செய்  கின்றோய்  என்செய்வேன்  இதற்கு  நன்குகைம்  மாறுநா  யேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com