திருவருட்பா  10. பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல்

வானை  நோக்கிமண்  வழிநடப்  பவன்போல் 
வயங்கும்  நின்அருள்  வழியிடை  நடப்பான் 
ஊனை  நோக்கினேன்  ஆயினும்  அடியேன் 
உய்யும்  வண்ணம்நீ  உவந்தருள்  புரிவாய் 
மானை  நோக்கிய  நோக்குடை  மலையாள் 
மகிழ  மன்றிடை  மாநடம்  புரிவோய் 
தேனை  நோக்கிய  கொன்றையஞ்  சடையோய் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
1
வாயி  லான்பெரு  வழக்குரைப்  பதுபோல் 
வள்ளல்  உன்னடி  மலர்களுக்  கன்பாம் 
தூயி  லாதுநின்  அருள்பெற  விழைந்தேன் 
துட்ட  னேன்அருள்  சுகம்பெற  நினைவாய் 
கோயி  லாகநல்  அன்பர்தம்  உளத்தைக் 
கொண்ட  மர்ந்திடும்  குணப்பெருங்  குன்றே 
தேயி  லாதபல்  வளஞ்செறிந்  தோங்கித் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
2
வித்தை  இன்றியே  விளைத்திடு  பவன்போல் 
மெய்ய  நின்இரு  மென்மலர்ப்  பதத்தில் 
பத்தி  இன்றியே  முத்தியை  விழைந்தேன் 
பாவி  யேன்அருள்  பண்புற  நினைவாய் 
மித்தை  இன்றியே  விளங்கிய  அடியார் 
விழைந்த  யாவையும்  தழைந்திட  அருள்வோய் 
சித்தி  வேண்டிய  முனிவரர்  பரவித் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
3
கலம்இ  லாதுவான்  கடல்கடப்  பவன்போல் 
கடவுள்  நின்அடிக்  கமலங்கள்  வழுத்தும் 
நலம்இ  லாதுநின்  அருள்பெற  விழைந்த 
நாயி  னேன்செயும்  நவைபொறுத்  தருள்வாய் 
மலம்இ  லாதநல்  வழியிடை  நடப்போர் 
மனத்துள்  மேவிய  மாமணிச்  சுடரே 
சிலம்இ  லாஞ்சம்ஆ  தியதருப்  பொழில்கள் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
4
போர்க்கும்  வெள்ளத்தில்  பொன்புதைப்  பவன்போல் 
புலைய  நெஞ்சிடைப்  புனிதநின்  அடியைச் 
சேர்க்கும்  வண்ணமே  நினைக்கின்றேன்  எனினும் 
சிறிய  னேனுக்குன்  திருவருள்  புரிவாய் 
கூர்க்கும்  நெட்டிலை  வேற்படைக்  கரங்கொள் 
குமரன்  தந்தையே  கொடியதீ  வினையைத் 
தீர்க்கும்  தெய்வமே  சைவவை  திகங்கள் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
5
ஓட  உன்னியே  உறங்குகின்  றவன்போல் 
ஓங்கும்  உத்தம  உன்அருட்  கடலில் 
ஆட  உன்னியே  மங்கையர்  மயலில் 
அழுந்து  கின்றஎற்  கருள்செய  நினைவாய் 
நாட  உன்னியே  மால்அயன்  ஏங்க 
நாயி  னேன்உளம்  நண்ணிய  பொருளே 
தேட  உன்னிய  மாதவ  முனிவர் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
6
முதல்இ  லாமல்ஊ  தியம்பெற  விழையும் 
மூடன்  என்னநின்  மொய்கழல்  பதமேத் 
துதல்இ  லாதுநின்  அருள்பெற  விழைந்தேன் 
துட்ட  னேன்அருட்  சுகம்பெறு  வேனோ 
நுதலில்  ஆர்அழல்  கண்ணுடை  யவனே 
நோக்கும்  அன்பர்கள்  தேக்கும்இன்  அமுதே 
சிதல்இ  லாவளம்  ஓங்கிஎந்  நாளும் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
7
கல்லை  உந்திவான்  நதிகடப்  பவர்போல் 
காமம்  உந்திய  நாமநெஞ்  சகத்தால் 
எல்லை  உந்திய  பவக்கடல்  கடப்பான் 
எண்ணு  கின்றனன்  எனக்கருள்  வாயோ 
அல்லை  உந்திய  ஒண்சுடர்க்  குன்றே 
அகில  கோடிகட்  கருள்செயும்  ஒன்றே 
தில்லை  நின்றொளிர்  மன்றிடை  அமுதே 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
8
நெய்யி  னால்சுடு  நெருப்பவிப்  பவன்போல் 
நெடிய  துன்பமாம்  கொடியவை  நிறைந்த 
பொய்யி  னால்பவம்  போக்கிட  நினைத்தேன் 
புல்ல  னேனுக்குன்  நல்அருள்  வருமோ 
கையி  னால்தொழும்  அன்பர்தம்  உள்ளக் 
கமலம்  மேவிய  விமலவித்  தகனே 
செய்யி  னால்பொலிந்  தோங்கிநல்  வளங்கள் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
9
நீர்சொ  ரிந்தொளி  விளக்கெரிப்  பவன்போல் 
நித்தம்  நின்னிடை  நேசம்வைத்  திடுவான் 
பார்சொ  ரிந்திடும்  பவநெறி  முயன்றேன் 
பாவி  யேன்தனைக்  கூவிநின்  றாள்வாய் 
கார்சொ  ரிந்தெனக்  கருணைஈந்  தன்பர் 
களித்த  நெஞ்சிடை  ஒளித்திருப்  பவனே 
தேர்சொ  ரிந்தமா  மணித்திரு  வீதித் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகநா  யகனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com