திருப்புகழ் · 228பாதி மதிநதி (சுவாமிமலை)pAdhimadhinadhi
தான தனதன தான தனதன
தான தனதன ...... தனதான
Yaazh Music
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே.
பத உரைword meanings
- பாதி மதிநதி போதும்
பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், கொன்றை மலரையும் - அணிசடை நாத ரருளிய குமரேசா
அணிந்த சடைப் பெருமான் சிவபிரான் அருளிய குமரேசனே, - பாகு கனிமொழி மாது
சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற இனிய மொழியை உடைய மாதரசி, - குறமகள்
குறமகளாகிய வள்ளியின் - பாதம் வருடிய மணவாளா
பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே, - காது மொருவிழி காகமுற அருள்
பிரிக்கப்பட்ட ஒரு விழியை* காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய - மாயன் அரி திரு மருகோனே
ஸ்ரீராமர் மாய ஹரிக்கும், லக்ஷ்மிக்கும் மருமகனே, - காலனெனை யணுகாமல்
யமன் என்னை அணுகாத வகைக்கு - உனதிரு காலில் வழிபட அருள்வாயே
உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக. - ஆதி யயனொடு தேவர்
ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும் - சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா
தேவலோகத்தை ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே, - ஆடு மயிலினி லேறி
நடனம் ஆடும் மயில் மீது ஏறி - அமரர்கள் சூழ வர
தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர - வரும் இளையோனே
வருகின்ற இளையவனே, - சூத மிகவளர் சோலை
மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள் - மருவு சுவாமிமலைதனில் உறைவோனே
நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே, - சூர னுடலற
சூரனின் உடல் வீழ, - வாரி சுவறிட
கடல் வற்றிப்போக, - வேலை விடவல பெருமாளே.
வேலினைச் செலுத்தவல்ல பெருமாளே.
குறிப்புகள் · notes
- * சீதையின் மார்பை தன் அலகால் கொத்தின காகத்தின் மீது புல்லையே படையாக்கி ஸ்ரீராமர் செலுத்த, அப்படைக்கு அஞ்சி, காப்பவர் யாருமின்றி, ஸ்ரீ ராமரையே காகம் சரணடைய, அவர் அக்காகத்திற்கு அருளி, காகத்தின் ஒரு கண்மணியைப் பிரித்து, கண்களிரண்டிற்கும் ஒரு மணியேயென தண்டித்தார். காகாசுரனாக சாபத்தினால் வந்தது தேவேந்திரனது குமாரன் ஜயந்தன் ஆகும்.
- * When SeethA's chest was maimed by the devilish crow (KAkAsuran) while RAmA was sleeping on her lap in the jungle, RAmA woke up and used a blade of grass as a weapon to destroy the crow. Finding no other means of rescue, the crow surrendered to RAmA seeking mercy. RAmA graciously spared its life but punished it by removing one pupil and letting the crow use the remaining pupil for both the eyes. KAkAsuran was none other than IndrA's son Jayanthan who came as an evil crow due to a curse.




