திருப்புகழ் · 229மகர கேதனத்தன் (சுவாமிமலை)

தனன தான தத்த தனன தான தத்த
தனன தான தத்த ...... தனதான

Thiruppugazh Anbargal

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு ...... நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண் ...... மடமாதர்
இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து ...... விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்ப ...... தொருநாளே
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து ...... மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு ...... மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி ...... லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த ...... பெருமாளே.

பத உரை

  • மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாணி இட்டு
    மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் கையில் எடுத்து, இனிமை தரும் (கரும்பு வில்லில்) நாணை இட்டு,
  • நெறி சேர்வார் மலையவே வளைத்த சிலையின் ஊடு ஒளித்த
    நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி வளைத்த வில்லின் உள்ளே மறைத்து வைத்த
  • வலிய சாயகக் கண் மட மாதர் இகழ
    வலிய அம்பாகிய கண்ணை உடைய அழகிய (விலை) மாதர்கள் இகழும்படி,
  • வாசம் உற்ற தலை எ(ல்)லாம் வெளுத்து
    (ஒரு காலத்தில்) மணம் இருந்த தலையின் கருமயிர் முழுமையும் வெளுத்து,
  • இளமை போய் ஒளித்து விடுமாறு
    இளமை என்பது கடந்துபோய் எங்கோ மறைந்து புதைந்துவிடும்படி,
  • இடை விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து
    இடைவிடாமல் இதுவரை நான் எடுத்த பிறவி என்பதின் வேரை அறுத்து,
  • உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே
    உனது இனிமையான திருவடியை நீ தந்து அருளும் ஒரு நாள் கிட்டுமோ?
  • அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா
    ஏழு உலகங்கள் மீதும், அஷ்ட கிரிகளின் மீதும் முட்டும்படியாக அதிரவே செலுத்துகின்ற மயில் வீரனே,
  • அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே
    அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய, தேவர்களுக்கு முழு வாழ்வை அளித்த இளையவனே,
  • மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே
    மிகவும் நிலவொளியை வீசுகின்ற அமுத சடையராகிய சிவபெருமான் உன்முன் நின்று கேட்க விரும்புகின்ற சுவாமி மலையில் (உபதேச கோலத்தில்) வீற்றிருப்பவனே,
  • விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே.
    விரைவில் ஞான மூலப் பொருளை (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தந்தையாகிய சிவபெருமான், தான் அதனை அறிய வேண்டிக் கற்க, அவர் கேட்க அப்பொருளை அவருக்கு உபதேசித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout