திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 56

பாயிரம்வேதச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்ஆட்டும் ஆறாத அவனியில் மாட்டாதார்மேட்டு விருப்பார் விரதம்இல் லாதவர்ஈட்டும் இடம்சென் றிகலலுற் றாரே.

உரை

இறைவனைப் பற்றிய பாடல்களை இசையோடு ஒலித்துப் பாடி, அதற்கேற்ப பாவமும் காட்டி நடனமாடும் இளம்பெண்கள், அந்தப் பாடல்களின் மூலம் இறைவனை உணர்ந்து முக்தி பெறுவதற்கு முயற்சிக்காமல், தங்களின் நடனங்களின் மூலம் பொருள் பெறவே முயற்சிக்கின்றனர். அப்பெண்களின் நடனத்தைக் கண்டு களிப்பவர்களும் அதன் உண்மைப் பொருளை உணராமல், அவர்களின் நடனத்தைக் கண்டு சிற்றின்பத்திலேயே இருக்கின்றார்கள். உயர்வான வேதங்களை உயிர்கள் உய்யும் பொருட்டு உண்மைப் பொருளுணர்ந்து ஓதவேண்டிய அந்தணர்கள், மோட்சம் அடையவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான ஒழுக்கங்களைக் (விரதங்களைக்) கடைப்பிடிக்காமல், பிறர் கொடுக்கும் பொருளுக்காக வேதங்களை ஓதி யாகங்களை வளர்ப்பதால் இந்தப் பெண்களைப் போன்றவர்கள் ஆகின்றார்கள். இவர்களால் செய்யப்படும் யாகங்களைப் பெறுபவர்களும் உண்மைப் பொருள் உணராமல் உலகப் பொருள்களிலேயே மனம் செலுத்துவதால், அப்பெண்களின் நடனத்தைக் காண்பவர்கள் ஆகின்றார்கள். இவர்கள் கொடுக்கும் பொருளுக்கு ஆசைப்படும் அந்தணர்களோ, அப்படி பொருள் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று, தங்களின் உயர்வான பிறப்பை இழிபிறப்பாக மாற்றித் துன்பத்தில் வாழ்கின்றார்கள்.

வேதங்களில் இறைவனை அடையும் வழிகளும், அதைக் கடைப்பிடிக்கும்போது இருக்க வேண்டிய ஒழுக்கங்களும் (விரதங்களும்) கொடுக்கப்பட்டிருந்தாலும், அதைச் சிரத்தையோடு மேற்கொள்ளாமல் வெறும் சிற்றின்பத்தில் சிக்கி உலகப் பொருள்களை நாடி அலையும் உயிர்கள் தங்களின் பிறவிப் பயனை எய்யாமல் இழிந்துபோகின்றார்கள். அவ்வாறு இல்லாமல் பேரின்பப் பொருளான இறைவனை வேதங்கள் மூலம் உணர்ந்து முக்தியை அடைவீர்களாக என்று திருமூலர் இங்கு அருளுகின்றார்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனைப் பற்றிய பாடல்களை இசையோடு பாடி, பாவங்காட்டி நடனமாடும் இளம்பெண்கள்,

  • வரி 2

    அந்தப் பாடல்கள் மூலம் இறைவனை உணர்ந்து முக்தி பெறாமல், தங்கள் நடனத்தால் பொருள் பெறவே முயல்கின்றனர்; அவர்களின் நடனம் காண்பவரும் உண்மைப் பொருள் உணராமல் சிற்றின்பத்திலேயே இருக்கின்றனர்.

  • வரி 3

    மோட்சம் அடைய விரும்பியும் அதற்கான ஒழுக்கங்களை (விரதங்களை) கடைப்பிடிக்காத அந்தணர்கள், பிறர் கொடுக்கும் பொருளுக்காக வேதங்களை ஓதி யாகங்களை வளர்ப்பதால் இப்பெண்களைப் போன்றவர்கள் ஆகின்றனர்.

  • வரி 4

    பொருள் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று, தங்கள் உயர்வான பிறப்பை இழிபிறப்பாக மாற்றித் துன்பத்தில் வாழ்கின்றார்கள் அந்தணர்கள்.

திருமந்திரம் பாடல் #56

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout