திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1776

ஏழாம் தந்திரம்7. சிவ லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மலர்ந் தயன்மாலு முருத்திர மகேசன்பலந்தெழு மைமுகன் பரவிந்து நாதம்நலந்தரு சத்தி சிவன் வடிவாகிப்பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

உரை

அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தி எனும் பரம்பொருளே சிவ இலிங்க வடிவமாக இருக்கின்றான். அவனே தனது பேரருளால், வெளிச்சத்தின் வடிவமாகிய இறைவியாகவும், சத்தத்தின் வடிவமாகிய இறைவனாகவும் இருக்கின்றான். அவர்களுக்குக் கீழே ஐந்து விதமான தொழில்களைப் புரிகின்ற பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களாகவும் அவனே இருக்கின்றான். அனைவருக்கும் சக்தி கொடுத்து வழி நடத்துகின்ற குருநாதனாகவும் அவனே இருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    திருமாலின் தொப்புள் கொடியின் தாமரை மலரிலிருந்து வெளிப்படுகின்ற பிரம்மனும், திருமாலும், உருத்திரனும், மகேஸ்வரனும் இறைவனின் வடிவங்களே ஆவர்.

  • வரி 2

    அருளை வழங்குவதற்குத் தம்மைப் பலவிதமாகப் பிரித்து எழுகின்ற ஐந்து முகங்களைக் கொண்ட சதாசிவனும் அவனே; இந்த ஐவரும் பரம்பொருளாகிய வெளிச்சத்திலும் சத்தத்திலும் இருந்தே வெளிப்படுகின்றனர்.

  • வரி 3

    அந்த வெளிச்சமும் சத்தமும் அனைத்து நன்மைகளையும் தருகின்ற இறைவியின் வடிவமாகவும், இறைவனின் வடிவமாகவும் இருக்கின்றன.

  • வரி 4

    இந்த ஐந்து தெய்வங்களுக்கும் சக்தியைத் தருகின்ற சிவ இலிங்க வடிவமாகவும், அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகவும், குருநாதனாகவும் இருந்து அருளுகின்றான் சதாசிவமூர்த்தி எனும் ஆதிப் பரம்பொருள்.

திருமந்திரம் பாடல் #1776

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout