திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1514

ஐந்தாம் தந்திரம்17. சத்தி நிபாதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருட்டறை மூலை யிருந்த குமரிகுருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டிமருட்டி யவனை மணம்புணர்ந் தாளே.

உரை

இருளில் இருக்கின்ற அறைக்குள் ஒரு மூலையில் வீற்றிருக்கின்ற ஒரு இளம் கன்னியானவள், கண் தெரியாத குருடனாகிய கிழவனோடு ஒன்றாகச் சேருவது எனும் குறிக்கோளுடன், அவனது குருட்டை நீக்கி, நல்ல அழகுகளைப் பல விதங்களில் காண்பித்து, அவளுடைய அழகில் அவனை மயங்க வைத்து, அந்தக் கிழவனோடு திருமணம் புரிந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருந்தாள்.

மாயை எனும் இருளில் இருக்கின்ற உடம்பிற்குள் மூலாதாரத்தில் வீற்றிருக்கின்ற அருள் சக்தியானவள், மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற, பல பிறவி எடுத்த ஆன்மாவோடு ஒன்றாகச் சேருவது எனும் அருள் கருணையுடன், அந்த ஆன்மாவின் மாயையை நீக்கி, நன்மையான உண்மைகளைப் பல விதங்களில் உணர வைத்து, பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து, பல பிறவி எடுத்த அந்த ஆன்மாவோடு கலந்து நின்று எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாள்.

வரி வாரியாக

  • வரி 1

    இருளில் இருக்கின்ற அறைக்குள் ஒரு மூலையில் வீற்றிருக்கின்ற ஒரு இளம் கன்னி; மாயை எனும் இருளில் இருக்கின்ற உடம்பிற்குள் மூலாதாரத்தில் வீற்றிருக்கின்ற அருள் சக்தி.

  • வரி 2

    கண் தெரியாத குருடனாகிய கிழவனோடு ஒன்றாகச் சேருவது எனும் குறிக்கோளுடன்; மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற, பல பிறவி எடுத்த ஆன்மாவோடு ஒன்றாகச் சேருவது எனும் அருள் கருணையுடன்.

  • வரி 3

    அவனது குருட்டை நீக்கி, நல்ல அழகுகளைப் பல விதங்களில் காண்பித்து; அந்த ஆன்மாவின் மாயையை நீக்கி, நன்மையான உண்மைகளைப் பல விதங்களில் உணர வைத்து.

  • வரி 4

    அவளுடைய அழகில் அவனை மயங்க வைத்து, அந்தக் கிழவனோடு திருமணம் புரிந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருந்தாள்; பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து, பல பிறவி எடுத்த அந்த ஆன்மாவோடு கலந்து நின்று எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாள்.

திருமந்திரம் பாடல் #1514

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout