திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1233

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றதுபாரம் பரியத்து வந்த பரமிதுமாரங் குழலாளு மப்பதி தானுமுன்சாரும் பதமிது சத்திய மாமே.

உரை

பாடல் #1232 இல் உள்ளபடி, உண்மையான ஞானத்தை உணர்ந்து தெளிந்தவர்கள் அறிந்து கொண்ட மெய்யுணர்வாக இருக்கும் ஐம்பத்தொரு எழுத்துகளாகவும், அந்த எழுத்துகளுக்குத் தேவதைகளாகத் தலைமுறை தலைமுறையாகப் பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கும் அனைத்துத் தேவர்களுக்குள்ளும் ஒன்றாகக் கலந்து நிற்பதுவும் பரம்பொருளாகும். அந்தப் பரம்பொருளும், நறுமணமும் மருத்துவக் குணமும் கொண்ட கோடக மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலைக் கொண்ட இறைவியையும் முதன்மையாகக் கொண்டு, அவர்களைச் சார்ந்திருக்கும் மெய்யுணர்வு பெற்றவர்களுக்கு அருளுகின்ற திருவடிகளாகவும் சத்தியத்தின் உருவமாகவும் இருக்கின்றது சிவசக்தியே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மையான ஞானத்தை உணர்ந்து தெளிந்தவர்கள் அறிந்து கொண்ட மெய்யுணர்வாக இருக்கும் ஐம்பத்தொரு எழுத்துகளும் பரம்பொருளாகும்.

  • வரி 2

    அந்த எழுத்துகளுக்குத் தேவதைகளாகத் தலைமுறை தலைமுறையாகப் பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கும் அனைத்துத் தேவர்களுக்குள்ளும் ஒன்றாகக் கலந்து நிற்பதுவும் அந்தப் பரம்பொருளாகும்.

  • வரி 3

    நறுமணமும் மருத்துவக் குணமும் கொண்ட கோடக மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலைக் கொண்ட இறைவியையும் முதன்மையாகக் கொண்டு,

  • வரி 4

    அவர்களைச் சார்ந்திருக்கும் மெய்யுணர்வு பெற்றவர்களுக்கு அருளுகின்ற திருவடிகளாகவும் சத்தியத்தின் உருவமாகவும் இருக்கின்றது சிவசக்தியே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1233

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout