திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1061

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுறஎன்றெ னகம்படிந் தேழுல குந்தொழமன்றது வொன்றி மனோன்மணி மங்கலிஒன்றெனோ டொன்றிநின் றொத்தடைந் தாளே.

உரை

பாடல் #1060 இல் உள்ளபடி எனக்குள் நிறைந்து நின்ற திரிபுரை சக்தி, தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு, அனைத்துச் செயல்களோடும் கலந்து எனது உள்ளத்தில் பதிந்திருக்கின்றாள். ஏழு உலகத்திலும் அவளை உணர்ந்தவர்கள் வந்து தொழுகின்றபடி, எனது மனமாகிய அம்பலத்தில் ஆடுகின்ற இறைவனோடு ஒன்றி, மனோன்மணி என்னும் பெயருடன் தான் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் மங்கலமாக்குகின்றாள். (இறைவன் ஆடுகின்ற அனைத்து இடங்களும், அடியவர்களின் உள்ளம் உட்பட, அம்பலம் என்று அறியப்படும்; இறைவனோடு திரிபுரை சக்தி ஒன்றாகக் கலந்து நிற்பதே மனோன்மணி என்ற பெயரால் அறியப்படுகிறது.) சிவம் வேறு, திரிபுரை சக்தி வேறு என்று வேறுபடாமல் ஒன்றோடு ஒன்றாக ஒன்றி நின்று, எப்போதும் பிரியாமல் எனது உள்ளத்துள் ஒன்றாக அடைந்திருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    எனக்குள் நிறைந்து நின்ற திரிபுரை சக்தி, தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு,

  • வரி 2

    அனைத்துச் செயல்களோடும் கலந்து எனது உள்ளத்தில் பதிந்திருக்கின்றாள்; ஏழு உலகத்திலும் அவளை உணர்ந்தவர்கள் வந்து தொழுகின்றார்கள்.

  • வரி 3

    எனது மனமாகிய அம்பலத்தில் ஆடுகின்ற இறைவனோடு ஒன்றி, மனோன்மணி என்னும் பெயருடன் தான் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் மங்கலமாக்குகின்றாள்.

  • வரி 4

    சிவம் வேறு, அவள் வேறு என்று வேறுபடாமல் ஒன்றோடு ஒன்றாக ஒன்றி நின்று, பிரியாமல் எனது உள்ளத்துள் ஒன்றாக அடைந்திருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1061

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout