நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்பகலும்பாற் பட்டன்று இருள்.
nakalvallar allArkku mAyiru njAlampakalumpAR paTTan RiruL
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிற மனிதர்களோடு கலந்து இன்முகத்தோடு பேசி மகிழும் நற்பண்பு இல்லாதவர்களுக்கு, இந்த மிகப்பெரிய உலகமானது சூரியன் பிரகாசிக்கும் பகல் நேரத்திலும் கூடக் காரிருளில் மூழ்கிக் கிடப்பது போலத் தோன்றும்.
• நகல்வல்லர் அல்லார்க்கு = பிறரோடு கலந்து இன்முகத்தோடு பேசி மகிழும் பண்பில்லாதவர்களுக்கு,• மாயிரு ஞாலம் = மிகவும் பெரிய இந்த உலகமானது,• பகலும் = சூரிய ஒளி நிறைந்த பகல் பொழுதிலும் கூட,• இருட்பாற்பட்டன்று = காரிருள் சூழ்ந்து கிடப்பதைப் போன்றதேயாகும்.
மு.வரதராசன்
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
பரிமேலழகர்
நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். (எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பிலார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.
Meaning in English
To him who knows not how to smile in kindly mirth, Darkness in daytime broods o'er all the vast and mighty earth





