Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1000

பொருட்பால்ஒழிபியல்100. பண்புடைமை

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலந்தீமை யால்திரிந் தற்று.

paNpilAn peRRa perunjselvam nanpAlkalantImai yAltirin taRRu

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

நற்பண்புகள் இல்லாதவன் அடைகின்ற பெருஞ்செல்வமானது, தான் ஊற்றி வைக்கப்பட்ட பாத்திரத்தின் அழுக்கால் நல்ல பசுவின் பால் திரிந்து பாழாகிப் போவதைப் போல எவருக்கும் பயன்படாமல் கெட்டுப் போகும்.

• பண்பிலான் = நற்பண்புகள் இல்லாத கீழ்மகன்,• பெற்ற பெருஞ்செல்வம் = அடைகின்ற மிகப்பெரிய செல்வமானது,• நன்பால் = தூய்மையான பசுவின் நல்ல பாலானது,• கலந்தீமையால் = தான் வைக்கப்பட்ட பாத்திரத்தின் அழுக்கு மற்றும் களிம்பின் தீமையால்,• திரிந்தற்று = புளித்துத் திரிந்து கெட்டுப் போவதைப் போன்றதாகும்.

மு.வரதராசன்

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

பரிமேலழகர்

பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற் போலும். ('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

Meaning in English

Like sweet milk soured because in filthy vessel poured, Is ample wealth in churlish man's unopened coffers stored

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout