அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண்பு இல்லா தவர்.
arampOlum kUrmaiya rEnum marampOlvarmakkaTpaN pillA tavar
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனிதர்களுக்குரிய இரக்கமும் நற்பண்பும் இல்லாதவர்கள், இரும்பையே அறுக்கும் அரத்தைப் போன்ற கூர்மையான அறிவு படைத்த மேதைகளாக இருந்தாலும், அவர்கள் உணர்வற்ற மரத்திற்குச் சமமானவர்களே ஆவர்.
• மக்கட்பண்பு இல்லாதவர் = மனிதர்களுக்குரிய அன்பு மற்றும் ஈகை ஆகிய நற்பண்புகள் இல்லாதவர்கள்,• அரம் போலும் = இரும்பை அறுக்கும் அரத்தைப் போல,• கூர்மையரேனும் = கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்களாக இருந்தாலும்,• மரம் போல்வர் = ஓரறிவு கொண்ட மரத்தைப் போன்றவர்களே ஆவர்.
மு.வரதராசன்
மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
பரிமேலழகர்
மக்கட்பண்பு இல்லாதவர் - நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர்; அரம் போலும் கூர்மையரேனும் - அரத்தின் கூர்மை போலும் கூர்மையை உடையரேயாயினும்; மரம் போல்வர் - ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர். (அரம் - ஆகுபெயர். ஓர் அறிவு - ஊற்றினை யறிதல். உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது, ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட் பண்பு இன்மையின், அதுதானும் இல்லை என்பதாயிற்று.
சாலமன் பாப்பையா
மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.
Meaning in English
Though sharp their wit as file, as blocks they must remain, Whose souls are void of 'courtesy humane'





