Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 995

பொருட்பால்ஒழிபியல்100. பண்புடைமை

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்பண்புள பாடறிவார் மாட்டு.

nakaiyuLLum innA tikazhssi pakaiyuLLumpaNpuLa pATaRivAr mATTu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

விளையாட்டிற்காகக்கூட ஒருவரை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது மிகுந்த மனத்துன்பத்தைத் தரும்; எனவே மனிதர்களின் இயல்பை அறிந்து வாழும் பண்பாளர்கள், தம் பகைவர்களிடத்திலும் கூட ஏளனம் செய்யாமல் பண்போடு நடந்து கொள்வார்கள்.

• இகழ்ச்சி = ஒருவரை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது,• நகையுள்ளும் இன்னாது = விளையாட்டாகப் பேசும் பேச்சிலும்கூட அவனுக்குத் துன்பத்தையே தரும்;• பாடு அறிவார் மாட்டு = அதனால் மனிதர்களின் மன இயல்பை அறிந்து நடப்பவர்களிடத்தில்,• பகையுள்ளும் பண்பு உள = பகைமையுள்ள காலத்திலும் கூட இகழாமல் இன்சொல் பேசும் நற்பண்புகளே காணப்படும்.

மு.வரதராசன்

ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

பரிமேலழகர்

இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன. ('பாடறிவார்' எனவே , அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.)

சாலமன் பாப்பையா

விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.

Meaning in English

Contempt is evil though in sport They who man's nature know, E'en in their wrath, a courteous mind will show

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout