உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
uRuppottal makkaLop panRAl veRuttakkapaNpottal oppatAm oppu
Samrudha
பொருள் / உரை
முருகா எளிய உரை
உடல் உறுப்புகளின் தோற்றத்தால் மனிதர்களைப் போல் இருப்பது உண்மையான மனித ஒப்புமை ஆகாது; உள்ளத்தில் பொருந்தும் உயர்ந்த நற்குணங்களால் ஒத்திருப்பதே ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையான மனிதப் பண்பாகும்.
• உறுப்பு ஒத்தல் = உடலமைப்பு மற்றும் அங்கங்களால் மற்ற மனிதர்களைப் போல ஒத்திருப்பது,• மக்கள் ஒப்பு அன்றால் = நன்மக்களோடு ஒருவனை ஒப்பிட்டுப் பேசக்கூடிய உண்மையான ஒப்புமை ஆகாது;• வெறுத்தக்க = பொருந்தத்தக்க உயர்ந்த,• பண்பு ஒத்தல் = நற்குணங்களால் ஒத்திருப்பதே,• ஒப்பதாம் ஒப்பு = மனித சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையான ஒப்புமையாகும்.
மு.வரதராசன்
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
பரிமேலழகர்
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல் (வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று, வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.)
சாலமன் பாப்பையா
உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.
Meaning in English
Men are not one because their members seem alike to outward view; Similitude of kindred quality makes likeness true





