சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.
sAnRavar sAnRANmai kunRin irunilattAntAngkAtu mannO poRai
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
நற்குணங்கள் நிறைந்த சான்றோர்கள் தம் சான்றாண்மை நெறியிலிருந்து குறைந்து போவார்களேயானால், இந்தப் பெரிய பூவுலகம்கூட மனிதர்களின் பாரத்தைத் தாங்க முடியாமல் அழிய நேரிடும்.
• சான்றவர் = நற்குணங்கள் நிறைந்த சான்றோர்கள்,• சான்றாண்மை குன்றின் = தமக்குரிய சான்றாண்மைப் பண்பிலிருந்து குறைந்து போவார்களேயானால்,• இருநிலந்தான் = இந்த மிகப்பெரிய பூவுலகம்கூட,• பொறை தாங்காது = தன்மீது உள்ள பாரத்தைத் தாங்க முடியாமல் அழிய நேரிடும்.
மு.வரதராசன்
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.
பரிமேலழகர்
சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலந்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும். ('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான் அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.
Meaning in English
The mighty earth its burthen to sustain must cease, If perfect virtue of the perfect men decrease





