ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படு வார்.
Uzhi peyarinum tAmpeyarAr sAnRANmaikkAzhi yenappaTu vAr
Dr. Krithika Karthik
பொருள் / உரை
முருகா எளிய உரை
சான்றாண்மை என்னும் பெருங்கடலைத் தாங்கி நிற்கும் கரையாகத் திகழும் பெரியோர்கள், உலகமே தடம்புரண்டு அழியும் ஊழிக்காலமே வந்தாலும் கூடத் தம் உயர்ந்த நற்பண்புகளிலிருந்தும் ஒழுக்க நெறிகளிலிருந்தும் ஒருபோதும் மாற மாட்டார்கள்.
• சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் = சான்றாண்மை என்னும் பெருங்கடலுக்குக் கரை போன்றவர்களாக விளங்கும் பெருமக்கள்,• ஊழி பெயரினும் = கடல்களே தடம் புரண்டு மாறும் ஊழிக்காலமே வந்தாலும்,• தாம் பெயரார் = தம்முடைய உயர்ந்த நற்பண்புகளிலிருந்தும் ஒழுக்கத்திலிருந்தும் ஒருபோதும் மாற மாட்டார்கள்.
மு.வரதராசன்
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
பரிமேலழகர்
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'(புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.)
சாலமன் பாப்பையா
சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
Meaning in English
Call them of perfect virtue's sea the shore, Who, though the fates should fail, fail not for evermore





