இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.
inmai oruvaR kiLivanRu sAlpennumtiNmaiyuN TAkap peRin
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
சான்றாண்மை என்னும் சிறந்த பண்பும் மன உறுதியும் ஒருவரிடம் இருக்குமானால், அவரிடம் பொருட்செல்வம் இல்லாத வறுமை நிலை ஒருபோதும் அவருக்கு இழிவாகாது; மாறாக அவரது நற்குணங்களே அவருக்குப் பெருமை சேர்க்கும்.
• சால்பு என்னும் திண்மை = சான்றாண்மை என்கின்ற சிறந்த மன உறுதி,• உண்டாகப் பெறின் = ஒருவனிடத்தில் நிலைத்திருக்குமானால்,• ஒருவற்கு = அவனுக்கு,• இன்மை = பொருட்செல்வம் இல்லாத வறுமை நிலை,• இளிவு அன்று = ஒருபோதும் இழிவாகாது.
மு.வரதராசன்
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
பரிமேலழகர்
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
Meaning in English
To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly good





