இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.
innAsey tArkkum iniyavE seyyAkkAlenna payattatO sAlpu
Niranjan Bharathi
பொருள் / உரை
முருகா எளிய உரை
தமக்குத் துன்பமும் அநீதியும் இழைத்தவர்களுக்கும் பதிலுக்கு நன்மையும் உதவியுமே செய்யாவிட்டால், சான்றாண்மை என்னும் பெருங்குணத்தினால் என்ன பயன் உண்டாகும்? தீமை செய்தவருக்கும் நன்மையே செய்வதே சான்றாண்மையின் இயல்பாகும்.
• இன்னா செய்தார்க்கும் = தமக்குத் துன்பமும் தீமையும் செய்தவர்க்கும் கூட,• இனியவே செய்யாக்கால் = நன்மைகளையும் உதவிகளையுமே செய்யாமல் போனால்,• சால்பு = ஒருவரிடம் உள்ள சான்றாண்மை என்னும் பெருங்குணம்,• என்ன பயத்தது = வேறு என்ன நற்பயனைத் தந்துவிடும்? (ஒரு பயனும் தராது).
மு.வரதராசன்
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
பரிமேலழகர்
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?
Meaning in English
What fruit doth your perfection yield you, say! Unless to men who work you ill good repay





