Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 986

பொருட்பால்ஒழிபியல்99. சான்றாண்மை

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விதுலையல்லார் கண்ணும் கொளல்.

sAlpiRkuk kaTTaLai yAtenin tOlvitulaiyallAr kaNNum koLal

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவரது சான்றாண்மை என்னும் பெருங்குணத்தை உரைத்துப் பார்க்கும் உரைகல் எதுவென்றால், தமக்குச் சமமில்லாத கீழ் மக்களிடத்திலும் கூட வீண் தர்க்கம் செய்யாமல் தோல்வியை மனமுவந்து ஏற்று அமைதி காப்பதேயாகும்.

• சால்பிற்குக் கட்டளை யாது எனின் = ஒருவரது சான்றாண்மையின் தரத்தை அளந்தறியும் உரைகல் எதுவென்றால்,• துலை அல்லார்கண்ணும் = தமக்குச் சமமில்லாத சிறியவர்களிடத்திலும் கூட,• தோல்வி கொளல் = அவர்தம் அறியாமையை எண்ணித் தமக்கு ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொண்டு அடங்கி நிற்பதேயாகும்.

மு.வரதராசன்

சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

பரிமேலழகர்

சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல். (துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

Meaning in English

What is perfection's test? The equal mind To bear repulse from even meaner men resigned

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout