அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால் ஊன்றிய தூண்.
anpunAN oppuravu kaNNOTTam vAymaiyoTaintusAl pUnRiya tUN
M. K. Rajakumari
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறர் மீது கொள்ளும் அன்பு, பழி பாவங்களுக்கு வெட்கப்படும் நாணம், பிறர்க்கு உதவும் ஒப்புரவு, இரக்கத்தோடு நோக்கும் கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்து நற்பண்புகளுமே சான்றாண்மை என்னும் பெருநிலையைத் தாங்கி நிற்கும் வலிமையான தூண்களாகும்.
• அன்பு = பிறர் மீது செலுத்தும் அன்பு,• நாண் = பழி பாவங்களுக்கு அஞ்சி வெட்கப்படும் நாணம்,• ஒப்புரவு = உலகத்தாரோடு ஒத்து வாழும் நல்லுதவி,• கண்ணோட்டம் = எல்லோரிடமும் காட்டும் இரக்க உணர்வு,• வாய்மையொடு = உண்மை மட்டுமே பேசும் வாய்மை ஆகிய,• ஐந்து = இந்த ஐந்து சிறந்த நற்பண்புகளும்,• சால்பு ஊன்றிய தூண் = சான்றாண்மை என்னும் பெருங்குணத்தைத் தாங்கி நிற்கும் ஐந்து தூண்களாகும்.
மு.வரதராசன்
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
பரிமேலழகர்
அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு-யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து. (எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.)
சாலமன் பாப்பையா
மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
Meaning in English
Love, modesty, beneficence, benignant grace, With truth, are pillars five of perfect virtue's resting-place





